இன்று உச்ச நடிகர்கள் வருடத்திற்கு ஒருபடம் அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கும் வேளையில் 1960-70 களில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் வருடத்திற்கு 10 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்து ஆச்சர்யப்படுத்தினார்கள். அதனால் தான் அவர்கள் மக்கள் மத்தியில் வெகு விரைவாகச் சென்றடைய முடிந்தது. மேலும் இப்போதுள்ள பொழுதுபோக்குகள் போல் அல்லாமல் அப்போது சினிமா மட்டுமே முதன்மைப் பொழுதுபோக்காக இருந்ததால் மளமளவென படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தனர்.
இவற்றில் குறிப்பிடத்தகுந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவரது படம் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் வெளியாகிவிடும். ஒரே மாதத்தில் 8 படங்கள், 9 படங்கள், 10 படங்கள் என்பதெல்லாம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாவது சர்வ சாதாரணமாக இருந்தது. அந்த வகையில் கடந்த 1969 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் எட்டு படங்களில் நடித்தார். அவற்றில் மூன்று படங்கள் ஒரே இயக்குனர் இயக்கத்தில் வெளியான படங்கள் என்பது ஆச்சரியமான தகவல்.
எம்.ஜி.ஆர் படத்துக்கு மியூசிக் போட்ட இளையராஜா.. வெளிவராமலே பாதியில் முடங்கிய சோகம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 3 கால்ஷீட்டுகளில் நடிப்பார். காலை ஏழு மணி முதல் இரவு 12 மணி வரை நடித்த காலமும் உண்டு. சினிமாவே கதி என இருந்ததால் குடும்பத்தை அவரது மனைவிதான் பொறுப்பாக பார்த்துக் கொண்டதாகவும் சிவாஜி கணேசன் பல நேரங்களில் பேட்டி கொடுத்து இருந்தார்.
இளமைக் காலத்தில் முழுவதுமாக தான் நடிப்பு என்று இருந்து விட்டதாகவும் அப்போது தனது குடும்பத்தை தான் மிகவும் மிஸ் செய்ததாகவும் அவர் கூறியிருந்தார். கடந்த 1969 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் அன்பளிப்பு, தங்க சுரங்கம், காவல் தெய்வம், குருதட்சனை, அஞ்சல் பெட்டி 520, நிறைகுடம், தெய்வமகன், திருடன் மற்றும் சிவந்தமண் ஆகிய 9 படங்கள் வெளியானது.
இவற்றில் அன்பளிப்பு, திருடன், தெய்வமகன் ஆகிய மூன்று படங்களையும் ஏசி திருலோகசந்தர் இயக்கியிருந்தார் என்பது ஆச்சரியமான தகவல். ஒரு நாயகனை வைத்து ஒரு வருடத்தில் ஒரு படம் எடுப்பதே தற்போது மிகப்பெரிய சாதனையாக கருதப்படும் நிலையில் ஒரே நாயகனை வைத்து மூன்று படங்கள் ஒரு இயக்குனர் இயக்கியிருந்தது பெரும் ஆச்சரியம் தான்.
1969ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களில் தங்கச்சுரங்கம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சீரியசான கதை சொல்லும் குரு தட்சனை, காமெடியான கதை அம்சம் கொண்ட அஞ்சல் பெட்டி 520, ஆரம்பத்தில் காமெடியாகவும் அதன் பிறகு சீரியஸாகவும் கதை அம்சம் கொண்ட நிறைகுடம், 3 வேடங்களில் நடித்து ஆஸ்கார் விருது வரை சென்ற தெய்வமகன் ஆகிய திரைப்படங்களும் 1969ல் தான் வெளியானது.
அதேபோல் 1970 ஆம் ஆண்டுகளில் அவர் 9 படங்களில் நடித்திருந்தார். 1979 ஆம் ஆண்டில் பத்து படங்களில் நடித்திருந்தார். ஆனால் ஒரே இயக்குனர் சிவாஜியின் 3 படங்களை ஒரே ஆண்டில் இயக்கியது 1969 ஆம் ஆண்டு தான். அதேபோல் சிவாஜி கணேசன் 1982 ஆம் ஆண்டு அவர் 13 படங்களில் நடித்து சாதனை புரிந்தார். 1984 ஆம் ஆண்டு 10 படங்களும், 85 ஆம் ஆண்டு 8 படங்களும், 87 ஆம் ஆண்டு 10 படங்களும் அவர் நடித்திருந்தார். மொத்தமாக தன் சினிமா வாழ்க்கையில் கிட்டத்தட்ட 288 படங்களுக்கு மேல் நடித்து சாதனை புரிந்திருக்கிறார் நடிகர் திலகம்.