விஜய் டிவியின் முன்னணி தொடரான ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் இன்றைய எபிசோட் விறுவிறுப்பான திருப்பங்களுடன் நகர்கிறது. ரோகிணி ஏமாற்றிவிட்டாள் என்று மனோஜ் தனிமையில் சோகமாக இருக்கும்போது, அவனது கடையில் வேலை செய்யும் ஜீவா ஆறுதல் கூறுகிறார். மனோஜிடம், வாழ்க்கையில் ஒரு மாற்றத்திற்காக நீங்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றும், அதற்கு ஏற்றார் போல விவாகரத்து பெற்ற ஒரு பெண் தனக்குத் தெரியும் என்றும் கூறுகிறார். ஆனால் மனோஜ், இப்போதைக்கு தனக்குத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், அப்படியே ஒருவேளை தான் திருமணம் செய்வதாக இருந்தாலும், அது எவ்வித மணவாழ்வு அனுபவமும் இல்லாத ஒரு கன்னிப்பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று தனது பிடிவாதத்தை கூறுகிறான். இது அவனது இன்னும் மாறாத முதிர்ச்சியற்ற குணத்தை காட்டுகிறது.
இதனை தொடர்ந்து விஜயா தனது தோழி சிந்தாமணி மற்றும் ஒரு பைனான்சியருடன் மனோஜின் கடைக்கு வருகிறார். வீட்டின் மீது வங்கியில் இருக்கும் 14 லட்ச ரூபாய் கடனை அடைக்க தேவையான காசோலையை தந்துவிடுவதாகவும், அதற்கு பதிலாக வீட்டின் பத்திரத்தை வாங்கி தருமாறும் பைனான்சியர் கேட்கிறார். அப்போது விஜயா, பத்திரத்தை மீட்க தான் மட்டும் போதாது என்றும், தனது கணவர் அண்ணாமலையும் கையெழுத்திட வேண்டும் என்றும் கூற, அதை கேட்ட சிந்தாமணியும் பைனான்சியரும் அதிர்ச்சியடைகின்றனர். காரியம் கைகூடாமல் போய்விடுமோ என்று அவர்கள் அஞ்சும் வேளையில், மனோஜ் குறுக்கிட்டு தனது தந்தையின் கையெழுத்தை போலியாக போட தனக்கு தெரியும் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறான்.
மனோஜின் இந்த ஆபத்தான முடிவை கேட்டு விஜயா முதலில் தயங்கினாலும், எப்படியாவது கடனை அடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அமைதியாக இருக்கிறார். தந்தையின் கையெழுத்தை போலியாகப் போட்டு பத்திரத்தை மீட்க முயலும் இந்த செயல், விஜயாவையும் மனோஜையும் மீள முடியாத சட்டச் சிக்கலில் கொண்டு போய்விடும் என்பதை அவர்கள் உணரவில்லை. சிந்தாமணி தனது சுயலாபத்திற்காக மனோஜின் இந்த முட்டாள்தனமான முடிவை சந்தோஷமாக வரவேற்கிறார். இதன் மூலம் அண்ணாமலையின் குடும்ப கௌரவம் மீண்டும் ஒருமுறை இந்தத் தாய்-மகனால் கேள்விக்குறியாக்கப்பட போகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
மறுபுறம், ரவி மற்றும் சுருதி வாழ்க்கையில் குழப்பத்தை விளைவித்து கொண்டிருக்கும் நீத்துவை அழைத்து முத்துவும் மீனாவும் பேசுகின்றனர். அடுத்தவர் கணவனை காதலிப்பது சமூக ரீதியாகவும் அறநெறி ரீதியாகவும் தவறு என்று அவர்கள் அவளுக்கு அறிவுரை கூறுகின்றனர். ஆனால், இன்றைய காலத்து நவநாகரீக பெண்ணாக தன்னை காட்டி கொள்ளும் நீத்து, அதெல்லாம் ஒரு தவறே இல்லை என்று வாதிடுகிறாள். தான் ரவியை காதலிக்க சொல்லவில்லை என்றும், தான் மட்டுமே ரவியை காதலிப்பதாகவும், அவனுக்கு திருமணமானது தனக்கு தெரியும் என்றும் திமிராகப் பேசுகிறாள். மீனாவின் எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்தும் நீத்துவின் போக்கு, இந்த பிரச்சனை இப்போதைக்கு முடியாது என்பதையே உணர்த்துகிறது.
நீத்துவின் தலையீட்டால் மனமுடைந்த சுருதி, தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று யாரிடமும் பேசாமல் கதவை அடைத்து கொள்கிறாள். அவளது அம்மாவும் அப்பாவும் கதவை தட்டித் தட்டி அவளை வெளியே அழைக்க முயன்றும் பயனில்லாமல் போகிறது. ரவியின் மீது கொண்ட அதீத காதலால் ஏற்பட்ட ஏமாற்றத்தை சுருதியால் தாங்கி கொள்ள முடியவில்லை. சுருதிக்கும் ரவிக்கும் இடையே விரிசலை உண்டாக்கி, அதில் இன்பம் காணும் நீத்துவின் எண்ணம் தற்போது நிறைவேற தொடங்கியுள்ளது. இது ரவியின் குடும்பத்திற்கு புதிய தலைவலியை உருவாக்கியுள்ளது.
எபிசோடின் இறுதி காட்சியில் ரோகிணிக்கு மீண்டும் ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அவளது முதல் கணவனின் அண்ணனும் அண்ணியும் வருகை தருகின்றனர். இவர்களின் வருகையை பார்த்ததும் ரோகிணி உறைந்து போகிறாள். இதன் மூலம் ரோகிணியின் வாழ்க்கை மீண்டும் ஒரு பெரும் சோதனையை சந்திக்க போகிறது என்பதும், சிறகடிக்க ஆசை சீரியல் வரும் நாட்களில் பரபரப்பான கட்டத்தை எட்டும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
