விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய எபிசோடில், ரோகிணியின் உண்மை முகம் தெரிந்த பிறகு அண்ணாமலை குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் நீடிக்கின்றன. இந்த சூழலில் முத்துவையும் மீனாவையும் பார்ப்பதற்காக முருகன் மற்றும் வித்யா தம்பதியினர் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது முத்து, வித்யாவை பார்த்ததும் தனது ஆதங்கத்தைக் கொட்டுகிறார். ரோகிணி, வித்யா, மீனா என அனைவரும் கூட்டு களவாணிகள் என்றும், எல்லோரும் சேர்ந்துதான் தன்னை ஏமாற்றியதாகவும் குத்தி காட்டுகிறார். இதற்கு பதில் சொல்லும் வித்யா, தான் ஆரம்பத்தில் ரோகிணிக்கு உதவியது உண்மைதான் என்றாலும், மீனாவுடன் பழக தொடங்கிய பிறகு ரோகிணியை உண்மையை சொல்லும்படி வற்புறுத்தியதாக தனது தரப்பு நியாயத்தை விளக்குகிறார்.

மீனா ஏன் இந்த உண்மையை மறைத்தார் என்பது குறித்து வித்யா பேசும்போது, அது மீனாவின் சுயநலத்திற்காக அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறார். ரோகிணியின் மகன் கிரிஷுக்கு ஏதாவது ஆகிவிடும் என்ற பயமும், அவனது எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது என்ற நல்லெண்ணமும் தான் மீனாவை தடுத்ததாக கூறுகிறார். மேலும், ரோகிணியை பற்றி வித்யா ஒரு முக்கியமான எச்சரிக்கையை முத்துவிடம் விடுக்கிறார். ரோகிணி ஒரு சாதாரணப் பெண் அல்ல என்றும், அவளுக்கு பின்னால் யாரோ ஒரு பெரிய சக்தி இருந்து உதவி செய்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அவளுக்கு ஏதோ ஒரு சிறிய வாய்ப்பு கிடைத்தால் கூட போதும், அதை வைத்துக்கொண்டு எப்படியாவது மீண்டும் மனோஜுடன் சேர்ந்து வாழ்வதற்கு அவள் எந்த எல்லைக்கும் இறங்குவாள் என வித்யா எச்சரிக்கிறார்.

வித்யாவின் எச்சரிக்கையை கேட்ட முத்து, தனது அம்மா விஜயாவின் பிடிவாதத்தை பற்றி பேசுகிறார். ரோகிணியையும் மனோஜையும் பிரிப்பதில் தனது அம்மா எந்த எல்லைக்கு போவார் என்கிறார். இதற்கிடையில், ரவி மற்றும் ஸ்ருதி இருவரும் முத்து – மீனா ஜோடிக்கு தொடர்ந்து ஆதரவாக நிற்கின்றனர். அவர்களுக்கு ஆறுதல் கூறி தேற்றுகின்றனர். இதன்பின்னர் முத்து மீனாவை வீட்டிற்கு அழைத்து வரும்போது, வழக்கம்போல விஜயா தனது விஷமத்தனமான பேச்சை தொடங்குகிறார். மீனா ஒரு ராசி இல்லாதவள் என்றும், அவள் இந்த வீட்டிற்கு வந்த பிறகுதான் எல்லா துரதிர்ஷ்டங்களும் நடப்பதாகக் கூறி குத்தி காட்டுகிறார். ரோகிணி போன்ற ஒரு பெண் வீட்டிற்குள் நுழைந்ததற்கே மீனாதான் காரணம் என பழிபோடுகிறார்.

விஜயாவின் இந்த பேச்சை முத்துவும் அண்ணாமலையும் உடனடியாக கண்டித்தாலும், விஜயா தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். தான் செய்த தவறை தானே சரி செய்யப்போவதாக கூறும் அவர், மனோஜுக்கும் ரோகிணிக்கும் விவாகரத்து வாங்கி தரப்போவதாகச் சபதம் செய்கிறார். அதோடு நிறுத்தாமல், மனோஜுக்கு புதிதாக ஒரு பெண்ணை பார்த்துத் திருமணம் செய்து வைக்க போவதாகவும் கூறுகிறார். இதை கேட்ட ஸ்ருதி, ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற ஒருவனுக்கு யார் பெண் தருவார்கள் என்றும், அப்படியே யாராவது வந்தாலும் ஏற்கனவே திருமணமான பெண் தான் வருவார் என்று கூற, அதற்கு விஜயா தனது மகன் மனோஜுக்கு திருமணம் ஆகாத நல்ல பெண்ணை திருமணம் செய்து வைப்பேன் என அண்ணாமலை குடும்பத்தினர் முன்னிலையில் சவால் விடுகிறார்.

இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில், ரோகிணியும் சிந்தாமணியும் யாருக்கும் தெரியாமல் விஜயாவின் வீட்டிற்கு வருகின்றனர். அங்கு நடக்கும் களேபரங்களையும், விஜயாவின் ஆக்ரோஷமான பேச்சுகளையும் சிந்தாமணி தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுக்கிறார். இதை ஒரு வலுவான ஆதாரமாக பின்னாளில் பயன்படுத்தி, விஜயாவை மிரட்டவோ அல்லது சட்ட ரீதியாக தப்பிக்கவோ செய்யலாம் என அவர்கள் சதி திட்டம் தீட்டுகின்றனர். அண்ணாமலை குடும்பத்தை சிதைப்பதற்கும், மனோஜின் வாழ்க்கையில் மீண்டும் ஒட்டிக்கொள்வதற்கும் ரோகிணி தரப்பு போடும் இந்த திட்டம் சீரியலில் அடுத்தக்கட்ட திருப்பங்களுக்கு வழிவகுக்கிறது.
ரோகிணியின் இந்த தந்திரமான நகர்வுகளும், விஜயாவின் முரட்டுத்தனமான பிடிவாதமும் அண்ணாமலையின் குடும்ப அமைதியை முழுமையாக குலைத்துள்ளது. இந்த சதித் திட்டங்களில் இருந்து அண்ணாமலை குடும்பம் எப்படி தப்பிக்க போகிறது என்பதும், முத்துவும் மீனாவும் ரோகிணியின் அடுத்தடுத்த பொய்களை எப்படி முறியடிக்கப் போகிறார்கள் என்பதும் இனிவரும் எபிசோடுகளில் மிக முக்கியமான அம்சமாக இருக்கும். குறிப்பாக, சிந்தாமணி எடுத்துள்ள அந்த ரகசிய வீடியோ விஜயாவிற்கு எதிராக திரும்பும்போது, முத்து எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் கதையின் போக்கை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
