மதுரையில் உள்ள சௌராஷ்டிரக் குடும்பத்தில் பிறந்து முறைப்படி சங்கீதம் பயின்று தன் அபார குரல் வளத்தால் தமிழ் சினிமா ரசிகர்களைக் கட்டிப் போட்டவர் தான் பின்னணி பாடகர் TM சௌந்தரராஜன். தியாகராஜ பாகவதரின் பாடல்களை மேடையில் பாடி கச்சேரிகள் செய்து கொண்டிருந்திருக்கு கிருஷ்ண விஜயம் என்னும் படத்தில் முதல் வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் ராதே என்னை விட்டு போகாதடி என்னும் பாடல் மூலம் அறிமுகமான TMS தொடர்ந்து சிவாஜி, எம்ஜிஆரின் ஆஸ்தான பாடகரானார். இரு பெரும் ஜாம்பவான்களுக்கும் தனி தனியே குரல் எடுத்துப் பாடி பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை தமிழ் சினிமா உலகிற்கு கொடுத்தார் TMS.
இவர் பிரபல பாடகராக இருக்கும் போது திருநெல்வேலியில் நடைபெற்ற பொருட்காட்சிக்கு இவரது கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த கச்சேரியில் பங்கேற்கச் சென்ற TMS போகும் வழியில் கோவில்பட்டியில் ஒரு உணவகத்தில் சிற்றுண்டி சாப்பிட அமர்ந்திருக்கிறார். அங்கு வந்தவரிடம் சர்வர் வந்து என்ன வேண்டும் என்று கேட்க, சூடாக இரண்டு பஜ்ஜியை கேட்டிருக்கிறார் TMS. ஆனால் சர்வர் எடுத்து வந்த பஜ்ஜி ஆறிப்போய் இருக்க, என்னப்பா சூடா கேட்டேனே என்றிருக்கிறார் TMS. ஆனால் அதற்கு சர்வரோ எல்லாமே சூடாகத்தான் போடுறோம் என்ன செய்ய ஆறிப்போய்விடுகிறதே என சற்று அலட்சியமாக கூறிஇருக்கிறார்.
அதன் பின் சர்வர் காபி வேண்டுமா? டீ வேண்டுமா என்று கேட்க, ஒன்றும் வேண்டாமப்பா என்று சிரித்தபடியே சொல்லி கை கழுவ எழ, சர்வர் இலையை யாரு எடுப்பா என்ற சற்று அதட்டிய தொனியில் கேட்டிருக்கிறார். போர்டு வைக்கவேண்டியது தானே என்று TMS சொல்ல, Board முன்னரே வைத்துள்ளோம் நீங்கள் கவனிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். கையை கழுவிவிட்டு TMS சர்வரிடம், உங்கள் தொழிலில் கனிவான உபசரிப்பும், சாந்தமான குணமும் அவசியம் என்று கூறிவிட்டு கிளம்பியிருக்கிறார்.
அப்போது சர்வர் அருகில் இருந்தவரிடம் இன்னிக்கு நெல்லையில் TMS பாட்டு கச்சேரி இருக்கு. ஆனா அதுக்கு எனக்கு லீவு கிடைக்கல. அந்த எரிச்சலில் தான் இப்படி பேசினேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு அருகில் இருந்தவர் இப்போது சாப்பிட்டு போனாரே அவர்தான் உன் அபிமான பாடகர் TMS என்று சொல்ல, தவறை உணர்ந்தவர் வேகமாக வெளியில் வந்து எட்டிப்பார்க்க கார் பறந்து விட்டது.