தமிழ் சினிமாவில் படத்திற்கு படம் கெட்டப் மட்டும் மாற்றுவதுடன் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் தான் விஜய் சேதுபதி. இதுவரை 50 திரைப்படங்கள் நடித்துள்ள விஜய் சேதுபதியின் திரை பயணத்தில் நிறைய படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை என்பது தான் உண்மை. ஆனால், இத்தனை திரைப்படங்களில் ஒரே போன்று அவர் நடித்த கதாபாத்திரங்கள் இருக்காது என்பதும் மிகப்பெரிய விஷயம்.
விக்ரம் வேதா, சூது கவ்வும், காதலும் கடந்து போகும், விக்ரம், பண்ணையாரும் பத்மினியும் தொடங்கி இந்த ஆண்டு விஜய் சேதுபதியின் 50 வது திரைப்படமாக வெளியான மகாராஜா வரைக்கும் நீண்ட காலம் நிலைத்து நிற்கக் கூடிய வகையிலான கதாபாத்திரத்தில் தான் அவர் நடித்துள்ளார். அப்படி ஒரு சூழலில், மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக முதல் நடிக்க இருந்தது யார் என்பது பற்றியும், அதன் பின்னணி பற்றியும் தற்போது பார்க்கலாம்.
சக்கரக்கட்டி, வானம் கொட்டட்டும், மாஸ்டர், ராவண கோட்டம், ப்ளூ ஸ்டார் என சுமார் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஷாந்தனு பாக்யராஜ் நடித்திருந்தாலும் அவர் பேர் சொல்லிக் கொள்ளும்படி ஒரு சில படங்கள் மட்டும் தான் வெளியாகி உள்ளது. ப்ளூ ஸ்டார், வானம் கொட்டட்டும் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் ஷாந்தனுவின் நடிப்பு பேசப்பட்டாலும் மற்ற படங்கள் பலவும் தோல்வியை தான் சந்தித்திருந்தது.
ஆனால், அதே வேளையில் ஷாந்தனு தவறவிட்டு மற்ற ஹீரோ நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்கள் ஏராளம் உள்ளது. சசிகுமார் இயக்கத்தில் சுப்ரமணியபுரம் திரைப்படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் சிறந்த க்ளாஸிக் இந்திய படங்களில் ஒன்றாக உள்ளது. இதே போல, பரத் திரை பயணத்தில் மைல்கல்லாக இருந்த காதல், ஷங்கர் இயக்கத்தில் உருவான பாய்ஸ், விமலுக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்த களவாணி உள்ளிட்ட திரைப்படங்களில் முதலில் நடிக்க இருந்தது ஷாந்தனு தான்.
ஆனால், சில காரணங்களால் ஷாந்தனு அந்த படங்களில் நடிக்காமல் போக, இவை அனைத்துமே தமிழ் சினிமாவின் மைல்கல்லாகவும் அமைந்திருந்தது. அதே வேளையில், ஷாந்தனு நடித்த படங்கள் பெரிய ஹிட்டாக அமையவில்லை. அப்படி இருக்கையில் தான் மகாராஜா கதையிலும் முதலில் ஷாந்தனு நடிக்க இருந்தாராம்.
நித்திலன் மகாராஜா திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பாக தனது முதல் திரைப்படமாக குரங்கு பொம்மை என்ற படத்தை உருவாக்கி இருந்தார். இதன்பின்னர், சுமார் 8 ஆண்டுகள் கழித்து தான் மகாராஜா படத்தையும் அவர் இயக்கி இருந்தார்.
ஆனால், குரங்கு பொம்மை கதையை எழுதுவதற்கு முன்பாகவே மகாராஜா கதையை தயார் செய்திருந்ததாகவும், ஷாந்தனுவை நடிக்க வைக்க விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார். ஷாந்தனுவும் இதில் நடிக்க ஆசைப்பட, ஆனால் சில காரணங்களாலும் படம் நடக்காமல் போயுள்ளது. இதன் பின்னர், குரங்கு பொம்மை கதையை எழுதி முதல் திரைப்படமாகவும் நித்திலன் இயக்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, தனது இரண்டாவது திரைப்படமாக மகாராஜா கதையை மீண்டும் தூசு தட்டிய நித்திலன், அதில் நிறைய மாற்றங்கள் செய்து விஜய் சேதுபதியை வைத்து இயக்கி மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருந்தார்.