தமிழ் சினிமாவில் திரைப்படங்களில் ஜோடியாக நடித்து பின்னர் நிஜ வாழ்க்கையிலும் தம்பதிகளாக மாறியவர்கள் ஏரளாமானோர் உள்ளனர். சூர்யா – ஜோதிகா, சுந்தர் சி – குஷ்பு, ஸ்னேகா – பிரசன்னா என பலரை பட்டியலிட்டு கொண்டே போகலாம். அந்த வகையில் முக்கியமான ஒரு ஜோடி தான் அஜித் குமார் மற்றும் ஷாலினி ஆகியோர்.
அமர்க்களம் என்ற ஒரே ஒரு படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள நிலையில், அதன் மூலமே அவர்கள் இருவருக்கும் இடையே காதல் உருவானது. பின்னாளில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு தற்போது வரை மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் என்ட்ரி கொடுத்திருந்த நடிகை ஷாலினி, கணவர் அஜித் குமாருடன் இருக்கும் ரொமான்டிக் புகைப்படங்களையும் ஏராளமாக பகிர்ந்து வந்தார்.
குழந்தை நட்சத்திரமாக கலக்கிய ஷாலினி, அதன் மூலம் முன்னணி நடிகையாகவும் பின்னர் உருமாறி இருந்தார். அதே போல குழந்தையாக சுமார் 10 ஆண்டுகள் வரை நிறைய படங்கள் நடித்து பெயர் எடுத்த ஷாலினி, முன்னணி நடிகையாக மாறிய பின் வெறும் நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் சுமார் 12 படங்கள் தான் நடித்திருந்தார்.
ஆனால், அதற்கு மத்தியில் அஜித் குமார், விஜய், மம்மூட்டி, திலீப், ஜெயராம், பிரசாந்த், குஞ்சாக்கோ என தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார். திருமணத்திற்கு பின் தனது குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட்டு வரும் ஷாலினி, சமீபத்தில் சில படங்களில் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அவை அனைத்தும் வதந்தி தான் என்பதும் பின்னர் தெரிய வந்தது.
இது ஒரு பக்கம் இருக்க, அஜித் மற்றும் ஷாலினி ஆகியோர் சமீபத்தில் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாவதை பார்த்து மீண்டும் அவர்கள் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, ஷாலினி மலையாளத்திலும், தமிழிலும் நடித்த முதல் மற்றும் கடைசி படங்கள் இடையே உள்ள ஒற்றுமையை பற்றி தற்போது காணலாம்.
மலையாளத்தில் முன்னணி நடிகையாக ஷாலினி அறிமுகமாகி இருந்த திரைப்படம் அனியத்திபிராவு. இந்த படத்தை பிரபல இயக்குனர் பாசில் இயக்கி இருந்தார். இதே படத்தின் ரீமேக்கான காதலுக்கு மரியாதை படத்தில் தான் தமிழில் நாயகியாக ஷாலினி அறிமுகமானார். இதையும் பாசில் தான் இயக்கி இருந்தார்.
அதே போல, ஷாலினி மலையாளத்தில் நடித்த கடைசி படமான நிறம் என்ற படத்தையும், தமிழில் கடைசி படமான பிரியாத வரம் வேண்டும் என்ற படத்தையும் இயக்குனர் கமல் இயக்கி இருப்பார். இப்படி நடிகை ஷாலினி முன்னணி நடிகையாக மலையாளம் மற்றும் தமிழில் அறிமுகமான படங்களை ஒரு இயக்குனரும், அதே இரண்டு மொழிகளில் கடைசியாக நடித்த படங்களை ஒரே இயக்குனரும் எடுத்துள்ள சுவாரஸ்யமான விஷயம், பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.