தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல முன்னணி ஹீரோக்களுக்கும், ஹீரோயின்களுக்கும் தங்கையாக நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை சரண்யா மோகன். இவரின் வாழ்க்கை வரலாறு, சினிமாவில் இருந்து விலகியதன் காரணம் மற்றும் இவர் தற்பொழுது என்ன செய்து வருகிறார் என்பது குறித்த தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.
1989 ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி ஆலப்புழாவில் சரண்யா மோகன் பிறந்துள்ளார். இவர் ஒரு மலையாளி என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த உண்மை. சரண்யாவின் தாய் மற்றும் தந்தை இருவரும் மிகப்பெரிய நடன கலைஞர்கள். பெற்றோர்கள் இருவரும் நடன கலைஞர்கள் என்பதால் சரண்யா மோகன் அவர்களும் சிறு வயதிலிருந்து நடனம் கற்றுக் கொண்டுள்ளார்.
அதிலும் குறிப்பாக சரண்யா மோகன் தனது 2 அரை வயதிலேயே நடன அரங்கேற்றத்தை நடத்தியதாக சரண்யாவின் அம்மா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தனது சிறு வயதிலேயே நடனத்தின் மீது கொண்ட ஆர்வத்தினால் சரண்யா பல இடங்களில் தொடர்ந்து அரங்கேற்றம் நடத்தி வந்துள்ளார்.
அந்த நேரத்தில் தான் இயக்குனர் பாஸில் அவர்கள் முன் சரண்யா தென்பட்டுள்ளார். குழந்தையாக இருந்தும் அவரின் நடன மற்றும் நடிப்பு திறமையை பார்த்த இயக்குனர் பாஸில் அவரை முதல் முதலாக மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்து வைத்திருந்தார். இந்த படத்தின் தமிழ் ரீமேக் படம் தான் விஜய் நடித்த காதலுக்கு மரியாதை, இந்த படத்திலும் நடிகை சரண்யாவே குழந்தை நட்சத்திரமாக தமிழிலும் நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து மலையாளத் திரையுலகில் இரண்டு முன்னணி ஹீரோக்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த சரண்யா அதன்பின் நடிப்பதை நிறுத்தி படிப்பில் கவனம் செலுத்தி வந்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் இயக்குனர் பாஸில் அவர்கள் ஒரு நாள் ஒரு கனவு என்ற படத்தின் மூலமாக சரண்யாவை மீண்டும் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரை உலகில் நடிக்க வைத்தார். இந்த படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் அவர்களின் இளைய தங்கையாக சரண்யா நடித்திருப்பார். அதைத் தொடர்ந்து பச்சை குதிரை என்னும் மலையாள திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு வெளிவந்த யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நடித்திருப்பார். தனுஷ் மற்றும் நயன்தாரா நடித்திருக்கும் இந்த படத்தில் இவர் நயன்தாராவின் தங்கையாக நடித்திருப்பார். இந்த திரைப்படம் தான் சரண்யா மோகனுக்கு ஒரு வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தின் மூலமாக அவர் தமிழ் சினிமாவில் மீண்டும் அடையாளம் காணப்பட்டார். இந்த படத்தில் ஹீரோ தனுஷ் உடன் அவருக்கு ஒரு பாடல் காட்சிகளும் இருந்தது. துரு துருவென என நடிக்கும் இளம் நடிகையாகவும் அவர் ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து ஜெயம் கொண்டான் திரைப்படத்தில் நடிகை பாவனாவிற்கு தங்கையாக நடித்துள்ளார். அடுத்ததாக மகேஷ் சரண்யா மற்றும் பலர் என்ற திரைப்படத்தில் நடிகர் சக்திக்கு தங்கையாக நடித்துள்ளார். சினிமாவில் முன்னணி ஹீரோயின் ஆக வேண்டும் என நினைத்து படம் நடிக்க வந்த சரண்யாவிற்கு அவர் நடிக்கும் அனைத்து படங்களிலும் தங்கச்சி கதாபாத்திரம் மட்டுமே கிடைத்து வந்துள்ளது.
அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் வெற்றி படங்களாக இருந்தாலும் தங்கச்சி கதாபாத்திரம் மட்டும் கிடைப்பதால் வெறுப்பான சரண்யா அடுத்ததாக படத்தில் நடிப்புக்கு சிறு இடைவேளை விட்டுள்ளார். அதற்கு அடுத்ததாக வெண்ணிலா கபடிக்குழு படத்தில் கதாநாயகியாக களமிறங்கினார். இந்த படத்தை தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் சரண்யா ஹீரோயினாக நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து அதே ஆண்டு ஈரம் திரைப்படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
அடுத்தடுத்து கிடைத்த தங்கை கதாபாத்திரத்தால் மீண்டும் ஒரு பிரேக் விட்ட நடிகை சரண்யாக்கு நடிகர் விஜயின் வேலாயுதம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மீண்டும் தங்கை கதாபாத்திரம் வேண்டாம் என இந்த படத்தை முதலில் சரண்யா மறுத்துள்ளார். அதன்பின் இயக்குனர் இந்த படத்தின் தங்கை கதாபாத்திரத்தில் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பின் இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக சரண்யா மோகன் நடித்திருப்பார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் பல மொழிப்படங்களில் நடித்து வந்த சரண்யா அதன்பின் சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து திருமண வாழ்க்கையில் ஈடுபட தொடங்கினார். தனது நீண்ட கால சிறு வயது நண்பரான பல் மருத்துவர் அரவிந்த் கிருஷ்ணன் என்பவரை 6 செப்டம்பர் 2015 அன்று திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது அனந்தபத்மநாபன் அரவிந்த் என்ற மகனும் அன்னபூர்ணா அரவிந்த் என்ற மகளும் அவருக்கு உள்ளார்கள்.
சரண்யா மோகன் நடிப்பிற்கு அடுத்தபடியாக அவர் மதித்து வந்த நடனத்துறையில் சாதித்து வருகிறார். அவர் சொந்தமாக ஒரு நடன பள்ளியையும் நடத்தி வருகிறார். நாட்டிய பள்ளி ஆசிரியராக மட்டுமில்லாமல் அடிக்கடி பெரிய அரங்கேற்றங்களையும் அவர் நடத்தி வருகிறார்.