கே விஸ்வநாத் இயக்கத்தில் உருவான ‘சங்கராபரணம்’ என்ற திரைப்படத்தில் மிகவும் கம்பீரமான ஒரு இசைக் கலைஞராக நடித்தவர் தான் சோமயாஜுலு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
நடிகர் சோமயாஜுலு, கடந்த 1928 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்தார். அவருடைய தந்தை ஆங்கிலேயர் காலத்தில் போலீஸ் அதிகாரியாக இருந்தவர். இதனால் மிகவும் செல்வாக்கான குடும்பமாகவும் இருந்துள்ளது. அப்படி ஒரு சூழலில், தந்தையை போல சோமையாஜுலு தனது இளவயதில் நன்றாக படித்து அரசு அதிகாரியாக மாறினார். அதன் பிறகு படிப்படியாக பதவி உயர்வு பெற்று உதவி கலெக்டராகவும் இருந்தார்.
அப்படி ஒரு சூழலில் தான் அவர் ஓய்வு நேரங்களில் நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். கடந்த 1976 ஆம் ஆண்டு ஜோதி என்ற படத்தில் நடித்தவர் அதன் பிறகு ’சங்கராபரணம்’ என்ற படத்தில் சங்கர சாஸ்திரி என்ற வேடத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அதன் பிறகுதான் அவருக்கு படிப்படியாக நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஸ்ரீ ராகவேந்திரா’ என்ற படத்தில் முனிவர் வேடத்திலும் நடித்திருப்பார் சோமையாஜுலு. இதனையடுத்து அவரை மிகச் சரியாக தமிழ் திரை உலகில் பயன்படுத்திக்கொண்டார் என்றால் அது நிச்சயம் பாக்யராஜ் தான். அவரது இயக்கத்தில் உருவான ’இது நம்ம ஆளு’ என்ற திரைப்படத்தில் சோமையாராஜுலு, ஸ்ரீனிவாச சாஸ்திரி என்ற வேடத்தில் நடித்தார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய பேரையும், புகழையும் பெற்றுக் கொடுத்தது.
அதன் பிறகு திருப்புமுனை, பகலில் பௌர்ணமி, மன்னவா போன்ற படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி பிற தென் இந்திய மொழிகளிலும், ஹிந்தி படங்களிலும் நடித்த அவர், கடந்த 2004 ஆம் ஆண்டு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக 73வது வயதில் மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு தென்னிந்திய திரையுலகினர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி இருந்தனர்.
தென்னிந்திய மொழிகளில் மட்டும் அவர் 45 ஆண்டு காலம் நடிகராக இருந்துள்ளார். அதில் சுமார் 500 படங்களுக்கு மேல் அவர் நடித்துள்ளார். அந்த அளவுக்கு மிகப்பெரிய அளவில் நடிகராகவும், திறமையானவராக மாறியதற்கு அவரது அம்மா சாரதா ஒரு காரணம் என்று அவர் பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.