தமிழ்ப்பட உலகில் மெலடி ஹிட்டுகளைக் கொடுத்த இசை அமைப்பாளர் பலர் உண்டு. இருந்தாலும் இவர் அந்த இசைக்கு மட்டுமே பிரபலமானவர். அவர் தான் எஸ்.ஏ.ராஜ்குமார். அவரைப் பற்றிப் பார்க்கலாமா…
ராபர்ட்-ராஜசேகர் என்ற இரட்டையர் இயக்கத்தில் உருவான படம் சின்னப்பூவே மெல்லப்பேசு. இந்தப் படத்தில் நட்புக்கு மரியாதை கொடுக்கும் விதத்தில் எஸ்.ஏ.ராஜ்குமாரை இசை அமைப்பாளராக அறிமுகமாக்கினர்.
அந்தப்படத்துக்காக ராஜ்குமார் 60 டியூன்களைப் போட்டாராம். அவற்றில் இருந்து 10 டியூன்களை மட்டும் தேர்ந்தெடுத்து அந்தப் பாடல்களை மட்டும் படத்தில் இடம்பெற வைத்தனர். அனைத்துப் பாடல்களையும் எஸ்.ஏ.ராஜ்குமாரே எழுதி உள்ளார். பாடல்கள் எல்லாமே செம மாஸ் ஹிட்.
இந்தப் படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய சங்கீத வானில் பாடல் செமயாக இருக்கும். அதே போல ஜெயச்சந்திரன் பாடிய சின்னப்பூவே மெல்லப்பேசு பாடல் மாஸ் ரகம்.
அதே போல ராஜ்குமார் இசையில் புதுவசந்தம், பூவே உனக்காக, ஆனந்தம் படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அவரது பாடல்களுக்காகவே அந்தப் படங்கள் சூப்பர் ஹிட்டாயின. புதுவசந்தம் படத்தில் வரும் இது முதல் முதலா வரும் பாட்டு, பூவே உனக்காகப் படத்தில் வரும் ஆனந்தம் ஆனந்தம் பாடும் பாடல், மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது பாடல், சொல்லாமலே யார் பார்த்தது பாடல் ரசிகர்களை பரவசப்படுத்தின. புத்தம் புது காதலர்களுக்கு இவை எல்லாம் தேசிய கீதம் போல ஆனது. 90ஸ் இளைஞர்கள் எப்போதும் முணுமுணுக்கும் பாடல்கள் ஆனது.
ஆனந்தம் படத்தில் வரும் பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பாடல் இவருக்குப் பெரும் புகழை சேர்த்தது. இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் யுகபாரதி. அவருக்கும் இந்தப் புகழ் போய்ச் சேர்ந்தது.
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தில் ஏதோ ஒரு பாட்டு, நீ வருவாய் என படத்தில் ஒரு தேவதை வந்துவிட்டாள், பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருந்தேன் பாடல்களை எல்லாம் இப்போது கேட்டாலும் மனதுக்கு இதமாக இருக்கும்.
அதே போல வானத்தைப் போல படத்தில் வரும் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பக்தி மணத்தை பரப்பியது. தாய்மார்களின் பேராதாரவைப் பெற்ற படம் இது.
துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் வரும் இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவமில்லை பாடல், மேகமாய் வந்து போகிறேன் பாடல்கள் ரம்மியமானவை. அதே போல சூரியவம்சம் படத்தில் ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ, காதலா காதலா, சலக்கு சலக்கு சரிகை சேலை பாடல்கள் அப்போது கல்யாண வீடுகளில் பிரபலம். பிரியமான தோழி படத்தில் மான்குட்டியே புள்ளி மான் குட்டியே, மறுமலர்ச்சி படத்தில் நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு, வசீகரா படத்தில் நெஞ்சம் ஒருமுறை வா என்றது என ராஜ்குமாரின் இசையில் எல்லாப் பாடல்களுமே அருமையான மெலடிகள் தான்.
தமிழ் இசை ரசிகர்களுக்கு மறக்க முடியாத இசை அமைப்பாளராகி அவர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொண்டார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகியவற்றில் 300க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். மனதை வருடும் இசையில் ரசிகர்களை மயக்கியவர் தான் இந்த எஸ்.ஏ.ராஜ்குமார்.