முரட்டு உருவத்துக்குள்ளும் மெல்லிய காதல் படரும். கல்லுக்குள் ஈரம் போல அந்தக் காதலுக்கு அப்பேர்ப்பட்ட சக்தி உண்டு. கல் நெஞ்சையும் கரைய வைத்து விடும் ஆற்றல் படைத்தது. காதல் தான் ஒரு மனிதனை நாகரீகமானவன் ஆக்குகிறது.
அவனுக்குள் ஒரு அழகியலைக் கொண்டு வந்து சேர்க்கிறது. இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. தமிழ்ப்படங்களில் கரடு முரடான வில்லன் வேடத்தில் நடித்து அசத்துபவர் ஆர்.எஸ்.மனோகர்.
இவர் ஒரு படத்தில் குடிகாரராக வந்து மனைவியைத் துன்புறுத்துவார். இவர் எம்ஜிஆர் நடித்த பல படங்களில் வில்லனாகவும் நடித்து மிரட்டியுள்ளார். அந்த வகையில் இவர் ஆஜானுபாகுவான உடல் தோற்றம் கொண்டவர். என்றாலும் இவருக்கும் ஒரு மெல்லிய காதல் அரும்பியுள்ளது. அது என்னன்னு பார்ப்போமா…
திரைப்படங்களில் வில்லன் வேடங்களில் நடித்தாலும் அதையே கதாநாயகனாக்கி அது போன்ற வேடங்களில் நடித்தவர் தான் நாடகக் காவலர் நடிகர் ஆர்.எஸ்.மனோகர்.
இலங்கேஸ்வரன், மாலிக்காப்பூர், சாணக்கியா சபதம் போன்ற நாடகங்கள் மனோகருக்குப் பெரும் புகழைச் சேர்த்தது. சினிமாவில் சேர்வதற்கு முன் மனோகர் ராணுவத்தில் இருந்தார்.
ராணுவத்தில் இருந்த போது சுபாஷ் சந்திரபோஸின் படைவீரர்கள் பலரையும் சந்திக்கக்கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அந்தக் காலகட்டத்திலே ராணுவத்தில் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் தான் அதிகமானவர்கள் இருப்பாங்க.
அவங்க கட்டுமஸ்தான உடல் அமைப்பைப் பெற்றிருப்பாங்க. அவங்களைப் பார்த்து விட்டு நாமும் அது போல கட்டுமாஸ்தாக இருக்க வேண்டும் என்று தினமும் உடற்பயிற்சி செய்வாராம் ஆர்.எஸ்.மனோகர். அப்படி அவர் உடற்பயிற்சி செய்யும்போது அதைப் பார்த்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அல்டிமா என்ற பெண்ணுக்கு மனோகர் மீது காதல் ஏற்பட்டது.

அதை ஒரு காலகட்டத்தில் மனோகரும் உணர்ந்தார். அந்தக் காதல் கைகூடா காதல்னாலும் அதை ஒரு கட்டுரையில் விரிவாகப் பதிவு செய்து இருக்கிறார் நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகர்.
அல்டிமாவைப் பொருத்தவரை மிகச்சிறந்த அழகி. என்ன காரணத்தாலோ என் மீது அல்டிமாவுக்கு அளவில்லாத பற்று ஏற்பட்டது. நானும் அவளும் பல மணி நேரங்கள் நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டு இருப்போம்.
ராணுவத்தில் இருந்து நான் வந்த போதும் என்னை மறக்காமல் கடிதங்கள் எழுதி அனுப்புவாள். நானும் அவளுக்கு கடிதம் எழுதுவேன். நாங்கள் வாழ்க்கையில் ஒன்று சேராமல் போனாலும் என்னால் மறக்க முடியாத பெண் அல்டிமா என்று ஒரு கட்டுரையில் பதிவு செய்துள்ளார் ஆர்.எஸ்.மனோகர்.
மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


