ஆர் ஜே பாலாஜி என்றாலே அவர் செய்த பிராங்க் கால்கள், காமெடி நடிகராக பின்னி பெடல் எடுப்பது, கிரிக்கெட் வர்ணனையில் அதை தாண்டி வேடிக்கையாக கேப்பே இல்லாமல் நிறைய விஷயங்களை சிரித்துக் கொண்டே பேசுவது என அவரது எந்த பக்கத்தை எடுத்தாலும் ஜாலியான ஒருவர் என்பது தான் நம் நினைவுக்கு வரும். அப்படிப்பட்ட ஆர் ஜே பாலாஜி வில்லனாக நடிக்கப் போகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?.
இது தொடர்பாக தற்போது வெளியான ஒரு தகவலை பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம். சூர்யா திரை அரங்கில் ஒரு ஹிட் படம் கொடுத்து நீண்ட நாட்களாகி விட்ட நிலையில், உச்சகட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான அவரது கங்குவா திரைப்படமும் தோல்வி அடைந்தது. ஆனால், அதே நேரத்தில் அடுத்தடுத்து சூர்யா நடித்து வரும் திரைப்படங்கள் மீது எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.
சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ரெட்ரோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் டீசர் வீடியோ வெளியாகி படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட்டடிக்கும் என்ற அளவுக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது. இதற்கு அடுத்தபடியாக, ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத Suriya 45 படத்திலும் நடித்து வருகிறார். மூக்குத்தி அம்மன் படத்தில் இயக்குனராக, எல் கே ஜி கதாசிரியராகவும் ஆர் ஜே பாலாஜி பணிபுரிந்துள்ளார்.
Suriya 45
அந்த அனுபவத்தைக் கொண்டு சூர்யாவை தனது கதை மூலம் ஈர்த்த ஆர் ஜே பாலாஜி, தற்போது Suriya 45 படத்திற்காகவும் மிக மும்முரமாக பணியாற்றி வருகிறார். தனி ஆல்பம் பாடல்கள் மூலம் கவனம் ஈர்த்த பிரபல பாடகர் திப்பு மற்றும் பிரபல பாடகி ஹரிணி தம்பதியரின் மகனான சாய் அப்யங்கர் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சூர்யாவுடன் த்ரிஷா, யோகி பாபு, நடராஜன், ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், Suriya 45 படத்தின் வில்லன் தொடர்பாக சில தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்கும் ஆர் ஜே பாலாஜியே தற்போது இந்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆர் ஜே பாலாஜி வில்லன்
சூர்யா இந்த படத்தில் வழக்கறிஞராக நடிக்கவுள்ள சூழலில் அவரை எதிர்த்து வாதாடும் வக்கீலாக ஆர் ஜே பாலாஜி நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. வெறுமென சண்டை போடும் வில்லனாக இல்லாமல் வாதங்களில் சூர்யாவை எதிர்க்கும் ஒரு வக்கீலாக எதிர்மறை கதாபாத்திரத்தில் ஆர் ஜே பாலாஜி நடிக்க உள்ளார் என்றும் தெரிகிறது.
ஆர் ஜே பாலாஜி என்றாலே வேடிக்கையாக சிரித்து கொண்டே நடிப்பதை ரசிகர்கள் கவனித்துள்ள சூழலில் அவர் வில்லனாக வந்தால், அதுவும் சூர்யாவை எதிர்த்து வரும் போது எப்படி இருக்கும் என்பது தற்போதே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.