அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடந்து முடிந்திருக்கும் வேளையில் நாடே ராமர் துதி பாடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் ஸ்ரீ ராமர் புகழ் பரப்பும் பாடல்கள் கோவில்களில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
மஹாவிஷ்ணுவின் ஏழாம் அவதாரமாம் ஸ்ரீராமர் புகழ் பரப்பும் பாடல்கள் எத்தனையோ இருந்தாலும் தனது ஒரே பாட்டில் ஒட்டுமொத்த ராமர் புகழையும் உள்ளடக்கி அந்தக் காலத்திலேயே பக்தி மணம் படைத்திருப்பார் கவியரசர் கண்ணதாசன். அர்த்தமுள்ள இந்துமதம் கொடுத்து இந்து சமயத்தின் அருமை பெருமைகளை உணர்த்தியவர் ஸ்ரீராமர் பாடலை இயற்றி அழியாப் புகழ் பெற்றிருக்கிறார்.
ஸ்ரீராமரின் புகழ் பாடும் அந்தப் பாடல் இடம்பெற்ற படம் லட்சுமி கல்யாணம். தெலுங்குக் கவிஞர் ஆருத்ராவும், கண்ணதாசனும் தினமும் பேசிக் கொள்ளும் நண்பர்கள். அப்படி இரு கவிஞர்களும் தினமும் பேசிக் கொள்ளும் போது இன்று என்ன பாடல் இயற்றினார்கள் என்பதைப் பற்றி விவாதிப்பது வழக்கம்.
அவ்வாறு ஒரு நிகழ்வில் கண்ணதாசனும், ஆருத்ராவும் பேசிக் கொள்கையில் அன்று கண்ணதாசன் இயற்றிய பாடல் ஒன்றைக் கேட்டிருக்கிறார் ஆருத்ரா. கண்ணதாசன் லட்சுமி கல்யாணம் என்ற படத்திற்காக ராமன் எத்தனை ராமனடி என்ற பாடலைச் சொல்ல மெய்சிலிர்த்தார் ஆருத்ரா. எப்படி இத்தனை ராமனையும் வகைப்படுத்தினீர்கள் என்று வியப்புடன் கேட்டிருக்கிறார்.
அப்போது கண்ணதாசன், “இராமயணத்தில் பட்டாபிஷேகப் படலத்திற்குப் பிறகு வரும் இரண்டாம் காதையில் சலவைத் தொழிலாளி ஒருவர் சொன்னார் என்பதற்காக ராமன் சீதையைக் கொண்டு சென்று காட்டில் விட்டுவிட்டு வரும்படி தம்பி லக்குவனிடம் ஆணையிடுவான். அவ்வாய்ச் சொல் ஏற்று லக்குவன் சீதையைக் காட்டில் விட்டு வீடு திரும்பிய போது ராமன் நிலைப்படியில் தலையை வைத்து அழுது கொண்டிருப்பான்.. அப்போது லக்குவன் அண்ணன் ராமனைப் பார்த்து.. ஏனண்ணா இது என்ன ? நீங்கள்தான் ஆணையிட்டீர்கள்.. இப்போது அழுதுகொண்டிருப்பதென்ன? என்று கேட்க,
ராமன் சொல்லியது…
‘ஆணையிட்டது கோசலராமன்..
அழுது கொண்டிருப்பது சீதாராமன்’ என்று
‘இப்பொறிதான் இப்பாடல் உருவானதற்கான கருவானது’ என்றார்.
மேலும் இப்பாடலில்,
கல்யாண கோலம் கொண்ட கல்யாணராமன்..
காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்..
அரசாள வந்த மன்னன் ராஜாராமன்..
அலங்கார ரூபன் அந்த சுந்தரராமன் ..
தாயே என் தெய்வம் என்ற கோசலராமன்..
தந்தை மீது பாசம் கொண்ட தசரதராமன்..
வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்டராமன்..
வெற்றி என்று போர் முடிக்கும்
ஸ்ரீ ஜெயராமன்.
கோபப்பட்ட தயாரிப்பாளர்.. வெகுண்டெழுந்த கவியரசு கண்ணதாசன்.. உருவான தெய்வம் தந்த வீடு பாடல்
வம்சத்துக்கொருவன் ரகுராமன்.
மதங்களை இணைக்கும் சிவராமன்.
மூர்த்திக்கொருவன் ஸ்ரீ ராமன்.
முடிவில்லாதவன் அனந்த ராமன்.
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்..
ராமஜெயம் ராமஜெயம்
ராமனின் கைகளில் நான் அபயம்..
என ராமனின் பெயர்களை வகைப்படுத்தி ஆச்சர்யப்படுத்தியிருப்பார் கண்ணதாசன். அதற்கு எம்.எஸ்.வியும், பி.சுசீலாவும் உயிர் கொடுத்திருப்பர்.