உலகநாயகன் கமலுடன் அதிக படங்களில் ஜோடி சேர்ந்தவர் ஸ்ரீதேவி. அதே போல தான் அவரது ஆஸ்தான நண்பரான ரஜினியுடனும் அதிக படங்களில் ஸ்ரீதேவி ஜோடி சேர்ந்துள்ளார். ரஜினி ஸ்ரீதேவி இருவரும் இணைந்து 16 படங்கள் நடித்துள்ளனர். ரஜினிக்கும் கமலைப் போல சிறந்த ஜோடி ஸ்ரீதேவி தான். இவருக்கு வில்லனாகவும் 2 படங்களில் நடித்து அசத்தியுள்ளார் சூப்பர்ஸ்டார். இவர்களின் படங்களில் சிலவற்றைப் பார்க்கலாம்.
மூன்று முடிச்சு
1976ல் வெளியான படம் மூன்று முடிச்சு. கே.பாலசந்தர் இயக்கத்தில் ரஜினி, கமல் இணைந்து நடித்த படம். இவர்களுடன் சேர்ந்து நடித்தவர் ஸ்ரீதேவி. எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்ற வசந்த கால நதிகளிலே பாடல் அப்போது செம ட்ரெண்ட் ஆனது.
இந்தப் பாடலில் கமலுடன் ஸ்ரீதேவி படகில் பயணம் செய்வார். படகோட்டியாக ரஜினி வருவார். அப்போது அவரது நடிப்பு செம சூப்பராக இருக்கும். கமல் ஆற்றில் விழுந்ததும் ரஜினியின் கண்களில் ஒரு வெறி தெரியும்.
காயத்ரி

1977ல் வெளியான இந்தப் படத்தை இயக்கியவர் பட்டாபிராமன். ரஜினி, ஜெய்சங்கர், ஸ்ரீதேவி உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார்.
நான் அடிமை இல்லை
துவாரகீஷ் இயக்கத்தில் 1986ல் வெளியான படம் நான் அடிமை இல்லை. ரஜினி, ஸ்ரீதேவி, மனோரமா, தேங்காய் சீனிவாசன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீதேவி கதாநாயகியாக நடித்த கடைசி தமிழ்ப்படம் இதுதான். விஜய் ஆனந்த் இசை அமைத்துள்ளார்.
ஒரு ஜீவன் தான் என்ற பாடல் இந்தப் படத்தில் தான் வருகிறது. அப்போது வானொலிப் பெட்டிகளில் இந்தப் பாடல் ஒலிக்காத நாள் இல்லை.
அடுத்த வாரிசு

1983ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான படம். ரஜினி, ஸ்ரீதேவி, மனோரமா, ஜெய்சங்கர், வி.கே.ராமசாமி உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை.
பேசக்கூடாது, ஆசை நூறு வகை ஆகிய பாடல்கள் இந்தப் படத்தின் சூப்பர்ஹிட் ஆனவை. இந்தப் பாடலில் ஆசை நூறு வகை பாடல் அப்போது செம வைரல். எந்த விழாவானாலும் இந்தப் பாடலைத் தான் முதலில் போடுவார்கள். அதிலும் கல்யாண வீடு களை கட்டுவதே இந்தப் பாடலை ஒலிபரப்பும் போது தான் என்பது 80ஸ் குட்டீஸ்களுக்குத் தெரியும்.
தனிக்காட்டு ராஜா
வி.சி.குகநாதன் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் உருவான படம் தனிக்காட்டு ராஜா. ரஜினி, ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, ஜெய்சங்கர், விஜயகுமார், சத்யகலா, ஒய்.ஜி.மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
நான் தான் டாப்பு, சந்தன காற்றே ஆகிய பாடல்கள் சக்கை போடு போட்டன. இவற்றில் சந்தனக் காற்றே என்ற காதல் மெலடி பாடலை இப்போது கேட்டாலும் சுகம் தான்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


