பொதுவாக சமுத்திரக்கனி படங்கள் என்றாலே நீதி, நேர்மை, கொள்கைகள் என நேர்கொண்ட பார்வையிலேயே படம் செல்லும். திரு. மாணிக்கம் படமும் அப்படித்தான். நேர்மையாக வாழ நினைக்கும் ஒருவனுக்குக் கிடைக்கும் அவமானங்களும், இன்னல்களுமே படம்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் நந்தா பெரியசாமியின் படம். ஆர்யா, சோனியா அகர்வால் நடித்த ஒரு கல்லூரியின் கதை படத்திற்குப் பிறகு சில படங்களை இயக்கினாலும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தன்னை திரு.மாணிக்கம் படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார் இயக்குநர் நந்தா பெரியசாமி.
சமுத்திரக்கனி, பாரதிராஜா, நாசர், அனன்யா, தம்பிராமையா, வடிவுக்கரசி, சின்னிஜெயந்த் ஆகியோர் நடித்துள்ள திரு.மாணிக்கம் படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது. பாரதிராஜா வாங்கும் ஒரு லாட்டரி சீட்டுக்கு விழும் பரிசுதான் கதையே. அதை லாட்டரி விற்பனையாளரான சமுத்திரக்கனி எப்படி கொண்டுபோய்ச் சேர்க்கிறார் என்பதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம், எமோஷனலுடன் கலந்து ஹிட் கொடுத்திருக்கிறார் நந்தா பெரியசாமி.
படத்தினைப் பார்த்து பலரும் பாராட்டி வரும் வேளையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரு.மாணிக்கம் படத்தினைப் பார்த்து பாராட்டியிருக்கிறார். தனது வாழ்த்துச் செய்தியில், ஒரு நல்ல படத்துக்கு அடையாளம், படம் பார்த்த பிறகு அதில் வரும் காட்சிகள், கதாபாத்திரங்கள் ஒரு மூன்று, நான்கு நாட்களுக்காவது நினைவில் வந்துகொண்டே இருக்கணும். அந்த படத்தில் வரும் எதாவது ஓர் நல்ல விஷயம், நம் வாழ்க்கையில் நாமும் கடைபிடிக்கணும் என்ற எண்ணம் உருவாகணும்.
அந்த மாதிரி சமீபத்தில் நான் பார்த்த திரு.மாணிக்கம் என்கிற படம் ஓர் அற்புதமான படைப்பு. உண்மை சம்பவத்தை வைத்து திரைக்கதை, வசனத்தை எழுதி சிறப்பாக இயக்கியிருக்கும் நந்தா பெரியசாமி அவர்கள், தான் ஓர் அற்புதமான இயக்குனர் என்பதை நிரூபித்திருக்கிறார். திரையுலகில் அவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.
இந்த திரைப்படம் இவ்வளவு சிறப்பாக உருவாக பணியாற்றியிருக்கும் மைனா சுகுமார், விஷால் சந்திரசேகர், குணா ரகு அவர்களுக்கும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் எனது அருமை நண்பர் சமுத்திரக்கனி, மதிப்பிற்குரிய பாரதிராஜா மற்றும் அனைத்து நடிகர், நடிகைகளுக்கும், இந்த படத்தை தயாரித்திருக்கும் G.P.ரவி குமார் மற்றும் என்னுடைய அருமை நண்பர் லிங்குசாமி மற்றும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.
இவ்வாறு அந்த வாழ்த்துச்செய்தியில் ரஜினிகாந்த் பதிவிட்டிருக்கிறார்.