நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் கடைசியாக ரஜினிகாந்த் பாடலை வைத்து காக்கா – கழுகு சண்டைக்கு விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பழைய பாடல்களை லோகேஷ் கனகராஜ் கைதி படத்தில் பயன்படுத்தி ஸ்கோர் செய்த நிலையில், அதே பாணியை ஜெயிலரில் நெல்சன், மார்க் ஆண்டனியில் ஆதிக் ரவிச்சந்திரனும் வைத்து ரசிகர்களை கவர்ந்தனர்.
லியோ படத்தில் மீண்டும் லோகேஷ் கனகராஜ் “கரு கரு கருப்பாயி”, “நான் பொல்லாதவன்” பாடல்களை வைத்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி உள்ள லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. முதல் பாதி சூப்பர் என்றும் இரண்டாம் பாதியில் படத்தின் கதையை கோட்டை விட்டு விட்டார் லோகேஷ் கனகராஜ் என்றும் ரசிகர்கள் மற்றும் பிரபல விமர்சகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் காக்கா – கழுகு ரஜினிகாந்த் சொன்னது மற்றும் ஹுகும், ஜுஜுபி பாடல் வரிகள் என மொத்தமாக தளபதி விஜய்யை ரஜினிகாந்த் தாக்கி விட்டார் என விஜய் ரசிகர்கள் பண்ண அலப்பறை தான் அந்த படமே மிகப்பெரிய ஹிட் அடிக்க காரணமாக அமைந்தது.
ஆனால், அதுவே லியோ படம் பெரும் சொதப்பலை சந்திக்க காரணியாக தற்போது மாறியுள்ளது. நடிகர் விஜய்க்கே லியோ திரைப்படம் பிடிக்காமல் போகத்தான் அந்த படத்தை புரமோட் செய்வதையே நிறுத்தி விட்டார் என்றும் கூறுகின்றனர். அந்தளவுக்கு படம் படு சுமாராக உருவாகி இருக்கிறது.
ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் எனும் ஹாலிவுட் படத்தின் ரீமேக்காக உருவாகி உள்ள இந்த படத்தை எல்சியூவில் கனெக்ட் செய்தாலும், பெரிய இம்பாக்ட் ஏற்படுத்தும் வகையில் லோகேஷ் கனகராஜ் திரைகக்தையை அமைக்க தவறி விட்டார் என்று தான் சொல்லவேண்டும்.
ரஜினிகாந்த் – விஜய் இடையே மோதல் என அவரது ரசிகர்கள் சண்டை செய்து வந்த நிலையில், அதெல்லாம் இல்லை. இப்போதும் நான் தலைவர் ரஜினி ரசிகர் தான் என்பதை நிரூபிக்க படத்தின் கடைசியில் “நான் பொல்லாதவன்” பாடலை இடம்பெறச் செய்து தேவையில்லாமல் ரஜினிகாந்தை வம்பிழுத்து வரும் தனது ரசிகர்களுக்கு பெரிய குட்டு வைத்திருக்கிறார்.