தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே சூப்பர்ஸ்டார் என்றால் நிச்சயம் ரஜினிகாந்தை சொல்லலாம். பாலிவுட் நடிகர்களே இதற்கு பல முறை ஒப்புக் கொண்டுள்ள நிலையில், கடந்த 47 ஆண்டுகளுக்கும் மேலாக தனது சூப்பர்ஸ்டார் என்ற அரியணையில் அமர்ந்து வெற்றி நடை போட்டும் வருகிறார்.
பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் அறிமுகமான ரஜினிகாந்த், அதன் பின்னர் எஸ். பி. முத்துராமன், மகேந்திரன், பாலு மகேந்திரா, பாரதிராஜா உள்ளிட்ட தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்கள் பலரின் திரைப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். கமர்சியல் திரைப்படங்களில் நடை, ஸ்டைல், டயலாக் பேசுவது என பட்டையை கிளப்பும் ரஜினிகாந்த், முள்ளும் மலரும், ஜானி, தளபதி உட்பட நடிப்பிற்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் இன்னொரு பரிமாணத்தையும் வெளிப்படுத்தி இருந்தார்.
சமீபத்தில் அவரது சில திரைப்படங்கள் பெரிதாக போகாத சூழலில், சூப்பர்ஸ்டார் என்ற பட்டம் இனி அவருக்கு இல்லை என்றும், ரஜினி நடிப்பதை நிறுத்திக் கொள்ளலாம் என்றும் பல்வேறு விமர்சனங்களும் எழுந்திருந்தது. ஆனால், ஜெயிலர் படத்தின் வெற்றியின் மூலம் தான் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சூப்பர்ஸ்டார் தான் என்பதை உரக்க சொன்னார் ரஜினிகாந்த்.
அடுத்ததாக ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் லால் சலாம், பொங்கல் விருந்தாக ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. இதை அவரது மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ளார். இதற்கடுத்து, த. ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அவருடன் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பமாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.
இந்த நிலையில், ரஜினி நடிப்பில் வெளியான ஒரு திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்கே பிடிக்காமல் போன சூழலில், பின்னர் ஒரு கடிதத்தால் எப்படி வெற்றியாக அமைந்தது என்பதை காணலாம். ரஜினிகாந்த் நடிப்பில் ஆர். வி. உதயகுமார் இயக்கிய திரைப்படம் ‘எஜமான்’. இளையராஜா இசையமைத்திருந்த இந்த திரைப்படத்தில் மீனா, நெப்போலியன், நம்பியார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இந்த படம் வெளியான சமயத்தில் பல ரஜினி ரசிகர்களுக்கே இந்த திரைப்படம் பிடிக்காமல் போனதாக சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் திலகவதி என்ற பெண் ஒருவர், எஜமான் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் புரொடக்ஷன்ஸிற்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அந்த படத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த வானவராயன் கதாபாத்திரம் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும், அது போல ஒரு கணவரை திருமணம் செய்ய விரும்புகிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதனை பத்திரிக்கையில் விளம்பரப்படுத்த நினைத்த ஏவிஎம் நிறுவனம், அந்த பெண் மற்றும் அவரது தந்தையின் அனுமதியுடன் எஜமான் படத்தின் விளம்பரத்தில் அந்த பெண் எழுதிய கடிதத்தை பயன்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, பல பெண்களும் எஜமான் படம் பற்றி கடிதங்கள் எழுத இந்த படமும் அதன் பின்னர் பெரிய வெற்றி படமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.