தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்த், அபூர்வராகங்கள் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமாகி இருந்தார். கடந்த 47 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து மிக முக்கியமான இடத்தையும் பிடித்துள்ளார். இத்தனை ஆண்டுகளில் பல பேர் வந்த போதிலும் சூப்பர் ஸ்டாரின் அந்தஸ்தை நெருங்கவே முடியாத ஒரு நிலை தான் உள்ளது.
இன்று வரையிலும் ரஜினியின் திரைப்படங்கள் வெளியாகும் சமயத்தில் எல்லாம் அதனை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து தான் வருகின்றனர். கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம் சுமார் 600 கோடி ரூபாய் வசூல் செய்து தமிழ் சினிமா கண்ட மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாகவும் உருவாகி இருந்தது.
இதற்கு அடுத்தபடியாக வேட்டையன் திரைப்படம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படம் என அடுத்தடுத்து மிகவும் பிஸியாகவும் ரஜினி நடித்து வருகிறார். இதற்கு மத்தியில் இயக்குனரும், ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியான லால் சலாம் திரைப்படத்திலும் ரஜினிகாந்த் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மத பிரச்சினை குறித்த கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்து பட்டையை கிளப்பி இருந்தார். ஆனால் அதே வேளையில் இந்த படத்திற்கு அதிகமாக கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்திருந்தது. இது பற்றி சமீபத்தில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூட சில கருத்துக்களை குறிப்பிட்டு விளக்கம் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்துடன் லால் சலாம் படத்தில் இணைந்து நடித்த நடிகர் லிவிங்ஸ்டன் தெரிவித்துள்ள கருத்து ஒன்று தற்போது ரசிகர் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. லால் சலாம் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் லிவிங்ஸ்டன் மனைவிக்கு ஹார்ட் அட்டாக் வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மனைவியின் நிலையை அறிந்து லிவிங்ஸ்டனும், அவரது குடும்பத்தினரும் கடும் வேதனையில் இருந்து வந்ததாகவும் தெரிகிறது.
இது பற்றி லால் சலாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தவர்களிடம் லிவிங்ஸ்டன் தெரிவிக்க இந்த விஷயம் எப்படியோ ரஜினிகாந்த காதுக்கும் சென்று விட்டது. உடனடியாக லிவிங்ஸ்டனை அழைத்து என்ன விஷயம் என்று கேட்க மனைவிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதை சரி செய்ய வேண்டுமென்றால் இன்னும் 15 லட்ச ரூபாய் தேவைப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் 15 லட்ச ரூபாயை கொடுத்து லிவிங்ஸ்டன் மனைவியின் சிகிச்சைக்கு உதவி செய்துள்ளார் ரஜினிகாந்த். சமீபத்திய பேட்டி ஒன்றில் எமோஷனலாக இது பற்றி பேசியிருந்த லிவிங்ஸ்டன், ‘ஒரு கைக்கு கொடுத்தால் இன்னொரு கைக்கு அறிய கூடாது என்று சொல்வார்கள். அந்த வகையில் எனக்கு ரஜினி உதவி செய்தது போல, யாருக்கும் தெரியாமல் பலருக்கு உதவி செய்துள்ளார்’ என தெரிவித்துள்ளார்