நம் வாழ்வில் எந்த நேரத்தில் நமக்கு ஆபத்து வரும் என்பதை நிச்சயம் எதிர்பார்க்கவே முடியாது. சில நேரங்களில் அந்த ஆபத்திலிருந்து எப்படியோ தப்பித்து மறுபிறவி போன்ற ஒரு சூழல் நிச்சயம் பலருக்கும் அமைந்திருக்கும். அந்த வகையில் இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக கலக்கி வரும் ரஜினிகாந்த்திற்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு துயரம் நடந்து அதிலிருந்து மறுபிறவி கிடைத்து அவர் கடந்து வந்த சம்பவத்தை பற்றி தான் தற்போது பார்க்க போகிறோம்.
இயக்குனர் கே. பாலச்சந்தர் ரஜினியை சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைக்க அதன் பின்னர் நடந்ததெல்லாம் அற்புதங்கள் மட்டும் தான். தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்த ரஜினி, இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் விளங்கிவரும் நிலையில் 50 ஆண்டுகளாக அந்த இடத்தை நெருங்குவதே பல நடிகர்களுக்கும் சவாலாக தான் இருந்து வருகிறது. முடிச்சூடா மன்னனாக சூப்பர் ஸ்டார் என்ற அரியணையில் அமர்ந்திருக்கும் ரஜினிகாந்த் தற்போதும் கூட படு பிஸியாக அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
ரஜினிக்கு மறுபிறவி
70 வயதை கடந்த ரஜினியின் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் மற்றும் வேட்டையன் என இரண்டு திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். அப்படி ஒரு சூழலில் ‘புவனா ஒரு கேள்விக்குறி’ என்ற திரைப்படத்தின் சூட்டிங்கில் நடந்த சம்பவத்தை பற்றி அதில் நாயகியாக இருந்த சுமித்ரா ஒரு நேர்காணலில் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
“புவனா ஒரு கேள்விக்குறி சூட்டிங் கன்னியாகுமரி கடற்கரையில் நடந்து கொண்டிருந்தது. அப்போது 12 மணிக்குள் ஷூட்டிங்கை முடித்து கரைக்கு திரும்புங்கள் என்றும் அப்பகுதியில் இருந்தவர்கள் தெரிவித்தனர். ஆனால் ஷூட்டிங் 12 மணியை கடக்க, திடீரென ஒரு பெரிய அலை வந்து சிவகுமார், ரஜினி உள்ளிட்ட படக் குழுவினர்கள் சிலர் கடலில் இழுத்துச் செல்லப்பட்டனர். சிவகுமார் மற்றும் வேறு சிலருக்கு நீச்சல் தெரியும் என்பதால் அவர்கள் மீண்டும் கரைக்கு வந்து விட்டனர்.
மயக்கத்துல இருந்தாரு
ஆனால் ரஜினியோ நீச்சல் தெரியாமல் அலைக்கு நடுவே சிக்கிக் கொள்ள படக்குழுவினர்கள் பதறியடித்தபடி அங்குமிங்குமாக ஓடினர். அந்த சமயத்தில் அங்கே மீன் பிடிப்பவர்கள் சிலர் நான்கு, ஐந்து போட்களை எடுத்துக் கொண்டு ரஜினியைத் தேட கடலில் இறங்கினர். அவரது முடி மட்டுமே தெரிய, அதன் மூலம் கண்டிபிடித்து கரைக்கு கொண்டு வந்தனர். அது ரஜினிக்கு மறுபிறவி. நிறைய தண்ணீர் குடித்திருந்ததால் மயக்கத்திற்கு சென்று விட்டார்.
அவர் பிழைத்து வந்ததே மிகப்பெரிய பாக்கியம் என்று தான் அந்த சமயத்தில் அனைவருமே குறிப்பிட்டனர். ரஜினிகாந்த் கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டது அந்த காலத்தில் பெரிய செய்தியாக வலம் வந்திருந்தது” என சுமித்ரா தெரிவித்துள்ளார்.