தமிழ் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் ரஜினிகாந்த், சமீபகாலமாக அதிகமாக விமர்சனங்களை சந்தித்து வருவதுடன் சமூக வலைத்தளங்களிலும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். என்னதான் அவர் விமர்சனத்தை சந்தித்தாலும் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை சுமார் 50 ஆண்டுகளாக சொந்தமாக்கி வைத்துள்ள பெருமையை நிச்சயம் வேறு யாராலும் பெற்று விட முடியாது.
இதில் ரஜினி மீது வரும் விமர்சனங்கள் பாதியும் அவர் 70 வயது தாண்டி திரைப்படங்களில் அந்த இடத்தை மற்ற நடிகர்களுக்கு விட்டுக்கொடுக்காமல் சொந்தமாக சூப்பர் ஸ்டார் பட்டத்தை வைத்துள்ளார் என்ற ஒரு பொறாமையும் உள்ளது. அதன் காரணமாகத்தான் ரஜினிகாந்தை தொடர்ந்து பலரும் கலாய்த்து அவரது இடத்தை காலி செய்ய வேண்டும் என்ற நோக்கிலும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் என்ன நடந்தாலும் ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டார் இடத்தை வேறு எந்த நடிகராலும் பெற்றுவிட முடியாது என்பதுடன் மட்டுமில்லாமல் இளம் நடிகர்களுக்கு சவாலாக தொடர்ந்து பல முக்கியமான திரைப்படங்களிலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான ஒரு சில திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்த சமயத்தில் பலரும் அதிகமாக விமர்சித்தனர்.
நிரந்தர சூப்பர்ஸ்டார்
ஆனால் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வசூல் ரீதியாக மட்டுமில்லாமல் மக்கள் கூட்டமும் திரையரங்கில் முட்டி மோத மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறி இருந்தது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க, ஜெயிலர் 2 படத்திற்கான பணிகளிலும் அவர் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதியன்று ஜெயிலர் 2 அறிவிப்பு வீடியோ வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனிடையே, நடிகர் மற்றும் இயக்குனர் பாண்டியராஜன், தன்னிடம் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டது தொடர்பாக ஒரு நேர்காணலில் தெரிவித்த கருத்து, பலரையும் மனம் கலங்க வைத்துள்ளது. “ஒரு நாள் அதிகாலை 3 மணி இருக்கும். நான் விமான நிலையத்தில் வந்திறங்கி பாஸ்போர்ட் சரி பார்க்க வரிசையில் நின்று கொண்டிருந்தேன்.
ரஜினி ஒரு மாமனிதன்
அப்போது அங்கே ரஜினிகாந்த் வேறொரு விமானத்தில் இருந்து இறங்கி ஆட்கள் அதிகமாக இல்லாத லைனில் சென்றார். அப்போது நான் இன்னொரு வரிசையில் நின்றதை கவனித்து என்னை பார்த்து சிரித்து விட்டு கொஞ்ச நேரத்தில் அங்கிருந்து கிளம்பி விட்டார். அதே நாள், காலை 10 மணி இருக்கும். ரஜினிகாந்த் என்னை அழைத்து, ‘சாரி பாண்டியன். நான் உங்கள தனியா விட்டுட்டு வந்துருக்க கூடாது. நான் அவங்ககிட்ட பேசி பாத்தேன். அவங்க ஏதேதோ காரணம் சொல்லிட்டாங்க’ னு சொல்லி மன்னிப்பு கேட்டார்.
இப்படி எனக்கு போன் செய்து அவர் சொல்ல வேண்டுமா. காலையில 10 மணிக்கு மெனக்கெட்டு என்னை அழைத்து பேசினார். ரஜினிகாந்த் ஒரு மாமனிதன்” என பாண்டியராஜன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.