அதிமுகவுக்கு ஓட்டு போட்டுட்டு காய்ச்சல் என பொய் சொல்லி கலைஞரை பார்க்க மறுத்த ரஜினிகாந்த்.. அடுத்து நடந்த ட்விஸ்ட்..

By Ajith V

Published:

தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் மிகப்பெரிய ஒரு ஆளுமையாக இருந்து மறைந்தவர் கலைஞர் கருணாநிதி. சினிமாவில் பல திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதி உள்ள கலைஞர் கருணாநிதி தமிழை அந்த அளவுக்கு நேசித்ததுடன் அதன் மூலம் மிகப்பெரிய தாக்கத்தையும், ஒரு புரட்சியையும் கூட உருவாக்கி இருந்தார்.

இவர் அரசியலிலும் அதிகம் ஈடுபட்டு வந்த நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் பலமுறை பொறுப்பேற்று பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளார். கலைஞரின் அரசியல் திறன் குறித்து பேசப் போனால் பல நாட்கள் தேவைப்படும். அந்த அளவுக்கு சிறந்த ஒரு அரசியல் ஆளுமையாக விளங்கிய கருணாநிதி, கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவு தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் பலரையும் மனம் உடையவும் வைத்திருந்தது.

இதனிடையே தற்போது கலைஞர் 100 என்ற பெயரில் அவரது மகனும் தற்போதைய தமிழக முதல்வருமான மு. க. ஸ்டாலின் தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சென்னை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் வைத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி, ‘கலைஞர் 100’ என்ற பெயரில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், வடிவேலு, தனுஷ், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “கலைஞர் கருணாநிதி குறித்து பேச ஆரம்பித்தால் எங்கு ஆரம்பிப்பது எங்கு முடிப்பது என்று எனக்கு தெரியாது. அந்த அளவுக்கு அவரால் ஈர்க்கப்பட்டவன் நான். . அவர் அரசியலுக்கு செல்லாமல் இருந்திருந்தால் இன்னும் பல சிவாஜி, எம்ஜிஆர்-களை உருவாக்கியிருப்பார். ஒருவருக்கு எழுத்தாற்றல் இருந்தால் பேச்சாற்றல் இருக்காது. ஆனால் கருணாநிதிக்கு இந்த இரண்டுமே இருந்தது” என்று பேசிய ரஜினிகாந்த், இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

இந்த நிலையில், அதிமுகவிற்கு ஓட்டு போட்டுவிட்டு கருணாநிதியை ரஜினி சந்தித்தது பற்றி பேசி இருந்த விஷயம் தற்போது பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. “கருணாநிதி ஒரு நடிகருடன் சேர்ந்து படம் பார்க்க திட்டம் போடப்பட்டிருந்தது. அது தேர்தல் சமயம் என்பதால் அந்த நடிகர் ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்த போது பத்திரிக்கையாளர்கள் அவரிடம் யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என்பதை பற்றி கேட்க அதிமுகவுக்கு என அந்த நடிகர் சொன்னது அந்த சமயத்தில் பெரிய அளவில் டிரெண்டானது.

அப்படி இருக்கையில் அன்று மாலை கருணாநிதியுடன் சேர்ந்து படம் பார்க்க வேண்டும் என்ற நிலை இருந்ததால் அங்கே எப்படி செல்வது என தெரியாமல் அந்த நடிகரும் காய்ச்சல் என்று சொல்லிவிட்டாராம். ஆனாலும் அவர் நிச்சயம் வரவேண்டும் என கருணாநிதி கூறி விட அங்கே சென்ற போது, ‘வாங்க காய்ச்சல்ன்னு சொன்னீங்களாமே. சூரியன் பக்கத்துல உட்காருங்க’ என்று கலைஞர் தனது ஸ்டைலில் பதில் சொன்னார். அந்த நடிகர் வேறு யாரும் இல்லை நான் தான்” என தனக்கும் கருணாநிதிக்கும் இடையே இருந்த பிணைப்பு பற்றி ரஜினிகாந்த் பேசிய விஷயம் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.