ரஜினி, கமலுக்கு புகழின் உச்சிக்கு வித்திட்ட இரு பஞ்ச் வசனங்கள்.. இவர் எழுதியதா?

By John A

Published:

கமலுக்கு நாயகன் எப்படி லைப் டைம் செட்டில் மெண்ட் படமோ அதேபோல் ரஜினிக்கு பாட்ஷா படமும் லைப் டைம் செட்டில்மெண்ட் படங்கள். இவ்விரு படங்களைத் தவிர்க்காமல் தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுத முடியாது. இவ்விரு நாயகர்களுக்கும் அவர்களை எப்போதும் நினைவு கூறத் தகுந்த இரு வசனங்கள் தான் கமலுக்கு,“‘நாலு பேருக்கு நல்லது பண்றதா இருந்தா எதுவுமே தப்பில்ல’ என்ற வசனமும், ரஜினிக்கு, “நான் ஒருதடவை சொன்னா நூறுதடவை சொன்ன மாதிரி” என்ற பஞ்ச் வசனமும்.

நாயகனுக்கும், பாட்ஷாவிற்கும் வசனம் எழுதியவர் வேறுயாருமல்ல. இலக்கிய உலகில் எழுத்துச் சித்தர் என்று போற்றப்படும் பாலகுமாரன் தான். தமிழின் முன்னணி இதழ்களில் ஒரே நேரத்தில் ஏழு தொடர்கதைகளை எழுதி, அத்தனை வாசகர்களையும் தன் எழுத்தை நேசிக்க வைத்தவர் இந்த எழுத்துச் சித்தர். காதலையும் மானுட உறவுகளையும் உண்மைக்கு நெருக்கமாகச் சொல்லிப் பரவசப்பட வைக்கும் எழுத்தாற்றல் கொண்டவர். ஆன்மிகக் கட்டுரைகளையும் அவர் தொடர்ந்து எழுதி எழுத்துச் சித்தர் ஆனார்.

மேலும் இயக்குநர் ஷங்கரின் ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ் போன்ற படங்களுக்கு  எழுத்தாளர் பாலகுமாரன்தான் வசனகார்த்தாவாக விளங்கினார். அதன் பிறகே சுஜாதாவை தனது படங்களுக்கு வசனம் எழுத வைத்தார் ஷங்கர். இதுமட்டுமல்லாமல் புதுப்பேட்டை, குணா, சிட்டிசன் போன்ற கதைக்கு முக்கியத்துவம் வாயந்த படங்களுக்கும் வசனகார்த்தா இவரே. இவரின் பேனா முனையால் உருவான வசனங்களில் வந்த படங்கள் சமுதாயத்தைக் கூர்தீட்டி யோசிக்க வைக்கும் ஆயுதமாக விளங்கியது. பாக்யராஜ் நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு படம் இவரின் இயக்கத்தில் வெளிவந்ததே.

ஜனாதிபதிக்கே கார் தராத நடிகவேள் எம்.ஆர்.ராதா… இறுதியில் எதற்கு பயன்படுத்தினார் தெரியுமா?

200 நாவல்கள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், இவற்றோடு 24 திரைப்படங்களுக்குத் திரைக்கதை, வசனங்கள் என எழுதிக்குவித்த இவரின் பக்கங்கள் மக்களின் மனதுக்கு நெருக்கமானவை. பெண்களின் சைக்காலஜி தெரிந்து எழுதுவதில் அவருக்கு நிகர் அவரே.

பெண்களிடம் பொதுவாக ஆண்கள் கவனிக்கத் தவறும் சில குணாதிசயங்களை அவர் கவனித்து (சரியாகக் கணித்து) எழுதும் சாமர்த்தியம் நிறைய பேருக்கு பிடிக்கும். உறவுகள், மனித உணர்வுகள், சிறு அத்துமீறல்கள் அவற்றின் நியாயங்கள் எல்லாவற்றையும் அவர் அலசும் விதமே அலாதி. நடுத்தர வர்க்கத்து மக்களின் உட்குரலாகவே அவரின் கதைகள் பெரும்பாலும் ஒலிக்கும்.

ராஜராஜ சோழனை உடையாராகவும், ராஜேந்திர சோழனை கங்கைகொண்டானாகவும், சிறப்பித்து தமிழை வளர்த்த எழுத்து சித்தரின் எழுத்துகள் மனதிற்குள் என்றும் சுடர் விட்டுக் கொண்டே தான் இருக்கும்.