திருமணமான புதிதில் ரோஹிணி மீது கோபத்தில் கொப்பளித்த ரகுவரன்.. அத்தனைக்கும் பின்னால் இருந்த எமோஷனல் விஷயம்..

By Ajith V

Published:

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் சிறந்த வில்லன்கள் யார் என பட்டியல் போட்டால் நிச்சயம் அதில் நடிகர் ரகுவரனுக்கு மிகப் பெரிய இடம் உண்டு. 49 வயதில் உடல்நிலை சரி இல்லாமல் ரகுவரன் உயிரிழந்து 16 வருடங்களுக்கு மேல் ஆனாலும் அவரது கதாபாத்திரங்கள் உருவாக்கிய தாக்கம் கொஞ்ச நஞ்சம் கிடையாது.

இன்று பல வில்லன் நடிகர்களை நம்மால் திரையில் பார்க்க முடிந்தாலும் ரகுவரன் போன்ற ஒருவரின் இடத்தை நிரப்புவதே கடினமான விஷயம் தான். பாட்ஷா, காதலன், முதல்வன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் தனது வில்லன் நடிப்பால் ரசிகர்களுக்கு அச்சுறுத்தலையே ஏற்படுத்தி இருந்தாலும், இன்னொரு பக்கம் அஞ்சலி, முத்து, அமர்க்களம், திருமலை என நிறைய படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் வேறொரு பரிமாணத்தில் பட்டையை கிளப்பி இருப்பார்.

நடிப்புக்காக அதிக அர்ப்பணிப்பை செய்திருந்த ரகுவரன், தனது குரல் மூலமும் கூட கதாபாத்திரங்களில் வித்தியாசத்தை ரசிகர்கள் மத்தியில் உணர வைத்திருந்தார். இப்படி பெரிய அளவில் மெனக்கெட்டு தன்னை நடிப்புக்காக தயார் செய்து வந்த ரகுவரன், ஒரு கட்டத்திற்கு பிறகு வில்லன் கதாபாத்திரங்கள் இல்லாமல் குணச்சித்திர கதாபத்திரங்களில் மட்டும் தான் கவனம் செலுத்தி வந்தார்.

அதிலும் அவரது கடைசி கட்ட திரைப்படங்களான சிவாஜி, யாரடி நீ மோகினி உள்ளிட்டவற்றில் அவரது கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்திருந்தது. மேலும், பிரபல நடிகை ரோஹிணியை ரகுவரன் திருமணம் செய்து கொண்ட சூழலில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்தும் செய்து கொண்டனர்.

இதற்கு மத்தியில், உடல்நலக் குறைவால் தவித்து வந்த ரகுவரன், 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் காலமானார். இன்னும் அவர் நடித்து கொடுத்த கதாபாத்திரங்களுக்கு உயிர் இருக்கும் சூழலில், அவரை பற்றி முன்னாள் மனைவியும் நடிகையுமான ரோகிணி தெரிவித்த கருத்து பலரையும் ஒரு நிமிடம் அசர வைத்துள்ளது.

“எனக்கும், ரகுவரனுக்கும் கல்யாணமான புதிதில் என்னிடம் மிக ஆக்ரோஷமாக பேசினார். ஏன் இவரு இப்படி பேசுறாரு என எனக்கு கடும் அதிர்ச்சியாக இருந்தது. அதன் பின்னர் தான் அவரது அம்மா என்னிடம் கூறினார், அப்படி கோபமாக இருந்தால் அவன் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறான் என்பதை கேள் என கூறுவார். உதாரணத்திற்கு அஞ்சலி படம் நடித்த சமயத்தில் அந்த அளவுக்கு அன்பாக தான் நிஜத்திலும் அனைவரிடத்திலும் பழகுவாராம். இது தான் கேரக்டராகவே வாழ்வது” என மெய்சிலிர்த்து போய் கூறினார் ரோகிணி.

இன்று பல நடிகர், நடிகைகள் அதிக அளவு நடிப்புக்காக மெனக்கெடல் இல்லாமல் இருக்க, ரகுவரனின் அர்ப்பணிப்பு பலரையும் ஒரு நிமிடம் வியந்து பார்க்க வைத்துள்ளது.