ஹைதராபாத்: புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்புக்காட்சியில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துள்ள அல்லு அர்ஜூன் தனது சார்பில் 25 லட்சம் நிவாரண உதவி தருவதாக அறிவித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 படத்தின் இரண்டாவது பாகம் டிசம்பர் 5ஆம் தேதி வியாழக்கிழமை வெளியானது. ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சாம்.சி.எஸ்.பின்னணி இசையமைத்துள்ளார். புஷ்பா 2 திரைப்படம் 2 நாட்களில் உலகம் முழுவதும் ரூ400 கோடி வசூலை குவித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘புஷ்பா 2’ படத்துக்கு தெலுங்கானா அரசு அனுமதி பெற்று திரையிடப்பட்ட அதிகாலை சிறப்பு காட்சியை காண பல ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சிறப்பு காட்சியைக் காண ஹைதராபாத்தில் உள்ள தியேட்டருக்கு சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார். இது தெலங்கானா மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த மரணம் அல்லு அர்ஜூனை அதிகமாக பாதித்துள்ளது. இது தொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். நிவாரணமும் அறிவித்துள்ளார்.
சிறப்பு காட்சியின் போது சந்தியா திரையரங்கில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம். நினைத்துப் பார்க்க முடியாத இக்கட்டான நேரத்தில் துயரத்தில் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதனால், புஷ்பா-2 கொண்டாட்டங்களில் எங்களால் தீவிரமாகப் பங்கேற்க முடியவில்லைஎன் சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்குவேன்; எங்கள் குழுவினருடன் அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய தயாராக இருக்கிறோம் என்று வீடியோ வெளியிட்டுள்ளார் அல்லு அர்ஜூன்.
இதனிடையே இனிமேல் எந்த படத்துக்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை என்று தெலுங்கானா அரசு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதுபோல் அதிகாலை அதுபோல் அதிகாலை காட்சிகளுக்கும் அனுமதி இல்லை என்று அரசு அறிவித்துள்ளது.