சிவகார்த்திகேயன் படத்துக்கு சிறந்த பட விருது.. ஆனா கொடுத்தது தமிழ்நாடு அரசு இல்ல.. எந்த மாநில அரசு தெரியுமா?

By John A

Published:

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாத் துறையில் நடிப்பு மட்டுமின்றி புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் சிறந்த படங்களையும் தயாரித்து வருகிறார். சமீபத்தில் வெளியாகி பல பாராட்டுக்களையும், உலக சினிமா விழாக்களில் பல விருதுகளையும் பெற்ற கொட்டுக்காளி திரைப்படம் சிவகார்த்திகேயன் தயாரித்ததே.

கனா, டாக்டர், டான், நெஞ்முண்டு நேர்மையுண்டு போன்ற படங்களையும் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான மற்றொரு படம் தான் குரங்கு பெடல்.

கமலக்கண்ணன் எழுதி இயக்கிய இத்திரைப்படத்தில் சந்தோஷ் வேல்முருகன், ஞானசேகர், வி.ஆர். ராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்திருந்தார். எழுத்தாளர் ராசி அழகப்பன் எழுதிய சைக்கிள் என்ற கதையை மையமாக வைத்து இப்படத்தினை இயக்கியிருந்தார் கமலக்கண்ணன். இத்திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு

சொந்த சைக்கிள் வைத்திருக்கும் சிறுவனுக்கும் வாடகை சைக்கிளில் ஓட்டக் கற்றுக் கொள்ளும் சிறுவனுக்கும் யார் முதலில் கற்றுக் கொள்கிறார்கள் என்பதுதான் கதை. 1990களின் பால்ய வயது நினைவுகளை குரங்குப் பெடல் படம் கண்முன் நிறுத்தியது.

இந்தப் படத்திற்கு தற்போது விருது கிடைத்துள்ளது. புதுச்சேரி மாநில அரசின் கடந்த 2022-ம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகள் பட்டியலில் குரங்கு பெடல் படம் தேர்வாகியுள்ளது. வருகிற அக்டோபர் 4-ம் தேதி திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இயக்குநர் கமலக்கண்ணணுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இவ்விருதினை வழங்குகிறார்.

ஏற்கனவே கொட்டுக்காளி திரைப்படம் பல விருதுகளைக் குவித்து வரும் நிலையில், தற்போது குரங்கு பெடல் படமும் அந்த லிஸ்ட்டில் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.