நடிகர் அஜீத்தின் எவர்கீரின் ஹிட் படங்களில் ஆனந்தப் பூங்காற்றே படத்திற்கு எப்பவுமே தனி ரசிகர் கூட்டம் உண்டு. ஆசை, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், நீ வருவாய் என போன்ற படங்களில் நடித்து அதிக அளவு பெண் ரசிகைகளைக் கொண்டிருந்த அஜீத்துக்கு ஆனந்தப் பூங்காற்றே படமும் அந்த ரகத்தில் இணைந்தது. காதல் மன்னனாக அஜீத் கலக்கிய நேரம் அது. அஜீத்தை புக் செய்ய தயாரிப்பாளர்கள் படையெடுத்து வந்த நேரமும் அது.
இந்த நிலையில் தான் அஜீத்தை ஆனந்தப் பூங்காற்றே படத்திற்காக இயக்குநர் ராஜ்கபூர் மற்றும் தயாரிப்பளார் ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீன் ஆகியோர் அணுகியிருக்கின்றனர். கதையைக் கேட்டு பிடித்துப் போன அஜீத் உடனடியாக ஒப்புக் கொண்டிருக்கிறார். மேலும் தனக்கு சம்பளமாக 22 லட்சம் அதுவும் உடனே வேண்டும் எனவும் கோரிக்கை வைக்க தயாரிப்பு தரப்பு ஒப்புக் கொண்டு சொன்னபடி சம்பளத்தினை அளித்திருக்கிறது.
இந்நிலையில் ஆனந்தப் பூங்காற்றே படத்தின் ஷுட்டிங் முதலில் கார்த்திக், மீனா சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டது. கிட்டத்தட்ட அஜீத் காட்சியைத் தவிர மற்ற அனைத்து காட்சிகளும் முடிக்கப்பட்டது. இறுதியில் அஜீத்தை அணுக அந்த நேரத்தில் அவருக்கு அறுவைசிகிச்சை நடைபெற்றிருந்தது.
வலியைத் தாங்கிக் கொண்டு ஒப்புக் கொண்ட படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அதே சமயம் ஆனந்தப் பூங்காற்றே படமும் 6 மாதமாக அஜீத் இல்லாததால் இழுத்துக் கொண்டே சென்றது. பின் இயக்குநர் ராஜ்கபூரும், தயாரிப்பாளரும் அஜீத் நிலை கண்டு மீண்டு வர வெகு நாட்களாக ஆகும் என எண்ணி அந்தப் படத்தில் அப்போது பிஸியாக இருந்த பிரசாந்தை ஹீரோவாக்க அணுகியிருக்கின்றனர். பிரசாந்தின் தந்தை தியாகராஜன் வேறு ஹீரோ ஒப்புக் கொண்ட படம் வேண்டாம் என்று முதலில் நோசொல்ல பின் அஜீத்தின் நிலையைக் கூறி பிரசாந்தை சம்மதிக்க வைத்திருக்கின்றனர். மேலும் போஸ்டரும் ரெடியானது.
இந்த போஸ்டர் எப்படியோ அஜீத்தின் பார்வைக்குச் சென்றிருக்கிறது. அறுவை சிகிச்சை முடிந்த அஜீத்தை தயாரிப்பாளர் காஜா மைதீனும், இயக்குநர் ராஜ்கபூரும் நேரில் சென்று பார்க்கும் போது, ஆனந்தப் பூங்காற்றே படத்தின் போஸ்டரைக் காட்டி அஜீத் அவர்களிடம் நான் திரும்பி வர மாட்டேன்னு நினைச்சீங்களா என்று கேட்டிருக்கிறார்.
இச்சம்பவம் அவர்களை சங்கடப்படுத்த உடனே தயாரிப்பாளர் காஜா மைதீன் அஜீத் இருந்தால் மட்டுமே இந்தப் படம். இல்லையென்றால் வேண்டவே வேண்டாம் என உறுதியெடுத்து அஜீத் குணமாகி வரும் வரை பொறுத்திருந்து பின்னர் படமாக்கியிருக்கிறார்கள்.
1999-ல் ஆனந்தப் பூங்காற்றே படம் வெளியாகி 100 நாட்களைக் கடந்து ஓடியது. மேலும் தேவாவின் இசையில் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. அஜீத்துக்கு நிறைய பெண் ரசிகைகளை உருவாக்கிக் கொடுத்த படங்களில் ஆனந்தப் பூங்காற்றே முக்கியமான படமாகும்.