‘லவ் டுடே’, ‘டிராகன்’ ஆகிய இரண்டு தொடர் வெற்றிகளை தந்த பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ என்ற திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படம் அவருக்கு ஹாட்ரிக் வெற்றி படமாக மாறியதா என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.
பிராங்க் மற்றும் சர்ப்ரைஸ் நிகழ்வுகளை நடத்தும் நிறுவனத்தை வைத்திருக்கும் பிரதீப், ஒரு கட்டத்தில் தனது மாமா மகள் மமிதா பைஜூ காதலை நிராகரிக்கிறார். இதனால் அவருடைய மமிதா பைஜூள் விரக்தியடைந்து வெளியூருக்கு மேற்படிப்பு படிக்க சென்று விடுகிறார். இந்த நிலையில் சில காலம் கழித்து மாமா மகள் மீது பிரதீப் ரங்கநாதனுக்கு காதல் வருகிறது. இதை அவர் மாமா சரத்குமாரிடம் சொல்லுகிறார். உடனடியாக சம்மதம் தெரிவிக்கும் அவர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார். திருமண தினத்தில் தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்றும், வேறொருவரை காதலிப்பதாகவும் மமிதா பைஜூ கூற, திருமணம் நின்று விடுகிறதா அல்லது திருமணம் நடந்ததா என்பது தான் இந்த படத்தின் கதை.
பிரதீப் ரங்கநாதன் வழக்கம்போல் தனது கதையை ஜென்-இசட் தலைமுறைக்காகவே இந்த படத்திலும் நடித்துள்ளார் என்பது படம் பார்க்கும்போது தெரிய வருகிறது. முன்னாள் காதலியின் திருமணத்திற்கு செல்லும் பிரதீப் செய்யும் அலப்பறைகள், மாப்பிள்ளையிடம் தாலி கட்டும்போது செய்யும் கிண்டல் என முதல் பாதி முழுவதும் முழுக்க முழுக்க பிரதீப்புக்காகவே காமெடியாக இயக்குனர் கீர்த்தி சுரேஷ் ஸ்க்ரிப்ட் எழுதியிருப்பது தெரிகிறது.
இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் ஜாதி மனிதர்களிடையே எந்த அளவுக்கு வேரூன்றி உள்ளது என்பதை சுற்றி வளைக்காமல் நச் என்று இயக்குநர் சில காட்சிகளில் கூறியிருப்பது பாராட்டத்தக்கது. முதல் பாதி முழுவதும் நகைச்சுவையிலேயே சென்றுவிடும் நிலையில், இரண்டாவது பாதியில் கொஞ்சம் சீரியஸாக கதை நகர்கிறது.
பிரதீப் ரங்கநாதன் தனது ஜென்-இசட் ரசிகர்களுக்காகவே தன்னை மாற்றிக்கொண்டார். அவரது ஒவ்வொரு காமெடிகள், நடிப்பு மற்றும் ‘அலப்பறை’க்கும் கைத்தட்டல் கிடைக்கிறது. மமிதா பைஜூவுக்கு இந்த படத்தில் கொஞ்சம் கனமான பாத்திரம்தான்; அவரும் அதை உணர்ந்து சிறப்பாகச் செய்துள்ளார்.
சரத்குமாருக்கு இயக்குநர் கீர்த்தி சுரேஷ் வலிமையான கேரக்டர் கொடுத்து, கிட்டத்தட்ட அவர்தான் ஹீரோ என்ற அளவில் அவருடைய கேரக்டரை மெருகேற்றி உள்ளார்.
சாய் அபயங்கர் இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆன நிலையில், பின்னணி இசையும் சிறப்பாக உள்ளது.
இரண்டாம் பாதியில் வலிந்து திணிக்கப்பட்ட சில காட்சிகள் தவிர படத்தில் வேறு எந்த குறையையும் பார்க்க முடியவில்லை. வழக்கம் போல் ஹீரோயினை திட்டினால் கைதட்டல் கிடைக்கும் என்ற பார்முலா இந்த படத்திலும் தொடர்கிறது. கிளைமாக்ஸ் கொஞ்சம் சினிமாத்தனமாக இருப்பதால், படம் பார்த்தவர்கள் முழுமையாக திருப்தியடைய முடியவில்லை.
சில குறைகள் மட்டும் இருந்தாலும், தீபாவளி கொண்டாட்டத்திற்கு ஏற்ற வகையில் உள்ள ஒரு நல்ல ஜாலியான படம் தான் ‘டியூட்’ என்பதில் சந்தேகமில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
