இன்னுமாடா பிரபாசை பான் இந்திய ஸ்டார்ன்னு சொல்றீங்க… காசு கொடுத்து படம் பார்க்க தியேட்டருக்கு வந்தது ஒரு குத்தமாய்யா.. 3 மணி நேரம் வச்சு செய்றாங்கய்யா.. ராஜா சாப்.. திரைவிமர்சனம்..!

ஜனநாயகன் படம் வராத கடுப்பில், “சரி வேற என்னதான் இருக்கு” என்று தியேட்டர் பக்கம் ஒதுங்கினால், அங்கே பிரபாஸின் ‘ராஜா சாப்’ நம்மை வரவேற்றது. பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் எதை செய்தாலும் அது ‘பேன்…

raja saab

ஜனநாயகன் படம் வராத கடுப்பில், “சரி வேற என்னதான் இருக்கு” என்று தியேட்டர் பக்கம் ஒதுங்கினால், அங்கே பிரபாஸின் ‘ராஜா சாப்’ நம்மை வரவேற்றது. பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் எதை செய்தாலும் அது ‘பேன் இந்தியா’ என்று ஒரு முத்திரை குத்திவிடுகிறார்கள். ஆனால், இந்த படத்தை பார்த்த பிறகு தியேட்டரில் திருவிழா நடக்கவில்லை, வந்தவர்கள் எல்லாம் “எப்படியாவது வீட்டுக்கு போயிடலாம்” என்று ‘வழி’ தெரியாமல் விழித்து கொண்டிருந்தார்கள்.

இயக்குநர் மாருதி படத்திற்கு முன்னாடி ஒரு சவால் விட்டார், “படம் பிடிக்கவில்லை என்றால் என் வீட்டு அட்ரஸ் தருகிறேன், அங்கே வந்து கேளுங்கள்” என்று. இப்போது ஆந்திரா ரசிகர்கள் அவர் வீட்டை தேடி கூகுள் மேப்பில் ரூட் போட்டு கொண்டிருப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது. கதை என்னவென்றால், பிரபாஸிற்கு ஒரு பாட்டி, அந்த பாட்டிக்கு ஒரு தாத்தா (சஞ்சய் தத்). அவர் காணாமல் போய்விட்டார். திடீரென்று அந்தப் பாட்டி, “நான் ஒரு இளவரசி” என்று ரீல் விட, பிரபாஸ் அவரை தேடி போகிறார். அங்கே போனால் சஞ்சய் தத் பேயாக வந்து நம்மை ‘வெளு வெளு’ என்று வெளுக்கிறார்.

மூன்று மணி நேரம் மூன்று நிமிடம் ஓடும் இந்த படத்தில், இடைவேளையிலேயே பாதி பேர் ‘எஸ்கேப்’. பிரபாஸை பேன் இந்தியா ஸ்டார் என்று சொல்வதை விட ‘பேன் நித்திரை ஸ்டார்’ என்று சொல்லலாம் போல. தூங்கி எழுந்து வந்த முகத்தோடு அப்படியே கேமராவிற்கு முன்னால் நிற்கிறார். மேக்கப் என்னவோ பண்ணியிருக்கிறார்கள், ஆனால் பல இடங்களில் பிரபாஸுக்கு பதில் ‘டூப்’ நடித்திருப்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. இது பேய் படமா, காமெடி படமா இல்லை சீரியஸ் படமா என்று இயக்குநருக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

படத்தின் ஓப்பனிங் சீனில் ஒரு அஸ்தி பானை ஆடுகிறது, 500 ரூபாய் நோட்டு பறக்கிறது. ராஜா காலத்து பங்களாவிற்குள் கட்டுக்கட்டாக புது 500 ரூபாய் நோட்டுகள் இருக்கின்றன. ராஜா காலத்திலேயே நம்மூர் அச்சகத்தில் நோட்டு அடித்து வைத்திருப்பார்கள் போல! இதற்கிடையில் நிதி அகர்வால், மாளவிகா மோகனன் என மூன்று நாயகிகள். எதற்கு வருகிறார்கள், எப்போது போகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை. கிராபிக்ஸ் வேலைப்பாடுகளை பற்றி சொல்லவே வேண்டாம்; உலகிலேயே மிக ‘மொக்கையான’ சிஜி எதுவென்றால் கண்ணை மூடிக்கொண்டு இந்த படத்தை கை காட்டலாம்.

பிரபாஸின் பாகுபலி பிம்பத்தை வைத்து இன்னும் எத்தனை காலத்திற்குத் தான் இப்படிப்பட்ட கதைகளை ஓட்டுவார்களோ தெரியவில்லை. கல்கி படமாவது கமல், அமிதாப் பச்சன் என்று தப்பித்தது. ஆனால் இதில் சஞ்சய் தத் கத்துவதை நம்மால் சகிக்கவே முடியவில்லை. 2026-ல் டெக்னாலஜி இவ்வளவு வளர்ந்த பிறகும், ஒரு பேய் படத்தை இவ்வளவு ‘தமாஷாக’ எடுக்க முடியும் என்பது ஆச்சரியம்தான்.

மொத்தத்தில், ‘ராஜா சாப்’ – பெயரில் தான் ராஜா, உண்மையில் ஒரு ‘சப்’ஆன படம். ஜனநாயகம் படம் ரிலீஸ் ஆகாத குறையை இந்த படம் தீர்க்கும் என்று நினைத்தால், அது நம் தலையெழுத்து தான். நாளை ‘பராசக்தி’ வருகிறது, அங்காவது உருப்படியாக ஏதாவது இருக்குமா என்று பார்ப்போம். காசு கொடுத்து கஷ்டப்பட விரும்புகிறவர்கள் மட்டும் இந்த ராஜா சாப்பை நேரில் போய் தரிசிக்கலாம்.