ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக, ஹிந்தி, தெலுங்கு, தமிழ் மொழி திரைப்படங்களுக்கு தான் இந்திய அளவில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இன்னொரு பக்கம் நல்ல தரமான கன்னட படங்களும் அவ்வப்போது வெளியாகி தான் வந்தது. ஆனால், அதே வேளையில் ஒட்டுமொத்த இந்திய சினிமா என்பதை தாண்டி சர்வதேச அளவில் ஒரு கன்னட திரைப்படம் பேசு பொருளாக மாறி இருந்ததற்கு மிக மிக முக்கிய காரணம் தான் இயக்குனர் பிரசாந்த் நீல்.
கேஜிஎஃப் என்ற திரைப்படத்தின் மூலம் மற்ற அனைத்து இந்திய மொழிகளையும் ஒரு காட்டு காட்டியதுடன் சர்வதேச அரங்கில் கூட அதிக கவனம் உருவாகி இருந்தது. கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் முழுக்க முழுக்க ஒரு மாஸ் கமர்சியல் எண்டெர்டெயினராக உருவாகி இருந்த இந்த திரைப்படம், பிரம்மாண்ட வெற்றி பெற்றதுடன் அதிக வசூலையும் தட்டித் தூக்கி இருந்தது.
கேஜிஎஃப் முதல் பாகம் பெற்ற வெற்றியின் காரணமாக, இரண்டாவது பாகம் அதனை விட அதிக வசூல் செய்ததுடன் ஏறக்குறைய 1,000 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டி இருந்ததாக தெரிகிறது. இப்படி இரண்டே படங்களில் கன்னட சினிமாவின் தலை எழுத்தையே இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் நடிகர் யாஷ் ஆகியோர் திருப்பி போட்டனர்.
கேஜிஎஃப் படத்தின் மூன்றாம் பாகமும் இருப்பதாக இரண்டாம் பாகத்தின் இறுதியில் தெரிய வர, அது தாமதமாகும் என்று தெரிகிறது. இதற்கிடையே, பிரபாஸ், பிரித்விராஜ் உள்ளிட்டோரை வைத்து சலார் என்ற திரைப்படத்தையும் எடுத்திருந்தார் பிரசாந்த் நீல். கேஜிஎஃப் படத்தின் இயக்குனர் என்ற எதிர்பார்ப்புடன் வெளியாகி இருந்த இந்த திரைப்படம், கலவையான விமர்சனங்களை தான் பெற்றிருந்தது.
இன்னொரு பக்கம், சலார் நல்ல திரைப்படம் தான் என்றும் கேஜிஎஃப் படங்களின் வெற்றியால் தான் இப்படி ஒரு நிலை உருவானதாகவும் ஆதரவான கருத்துக்களையும் வெளிப்படுத்தி இருந்தனர். இருந்தாலும் பிரசாந்த் நீல் மகுடத்தில் மற்றொரு மைல்கல் தான் சலார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக, தனது திரைப்படங்களில் தென் இந்திய நடிகர்களை அதிகம் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டவர் தான் பிரசாந்த் நீல்.
இதனிடையே, சலார் படத்தில் நடிப்பதற்காக பிரபல தமிழ் நடிகர் ஒருவர், ஏறக்குறைய 18 படங்கள் வரை நிராகரித்த தகவல் பலரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது. மைம் கோபி, சலார் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது பற்றி ஒரு நேர்காணலில் பேசி இருந்த மைம் கோபி, “சலார் படத்தின் இரண்டாம் பக்கம் இருப்பதால் வேறு படங்களில் நடிக்க முடியவில்லை. பிரசாந்த் நீல் என்னிடம் தாடியை மாற்றக் கூடாது என கூறிவிட்டார்.
அவரிடம் கொடுத்த வாக்கிற்காக நான் மொத்தம் 18 படங்கள் நடிக்கவில்லை. அதில், ரஜினிகாந்தின் ஒரு திரைப்பட வாய்ப்பு கூட எனக்கு பறிபோனது” என தெரிவித்துள்ளார். இயக்குனரிடம் தான் கொடுத்த வாக்கிற்காக தனக்கு வந்த பல திரைப்படங்களின் வாய்ப்பை மைம் கோபி நிராகரித்த தகவல், பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.