சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே அவர் தலையை கோதிக் கொண்டு, ஸ்டைலாக நடந்து வருவது தான் முதலில் ஞாபகத்துக்கு வரும். அந்த நடையிலே அவர் காட்டும் மாஸ் என்பது எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒன்றாகும். முள்ளும் மலரும், தளபதி, கபாலி, காலா உள்ளிட்ட நடிப்பிற்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் அதிகம் ரஜினிகாந்த் நடித்திருந்தாலும், அவரது கமர்சியல் திரைப்படங்கள் தான் பலரின் ஃபேவரைட்.
ரஜினிகாந்த் நடித்த முக்கியமான மாஸ் படங்கள் என லிஸ்ட் போட்டாலே அது ஒரு பக்கம் சென்று கொண்டே தான் இருக்கும். அந்த அளவுக்கு தன்னுடைய நடையிலும், ஸ்டைலிலும் வசன உச்சரிப்பிலும் பட்டையை கிளப்பும் ரஜினிகாந்த், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக சூப்பர் ஸ்டார் என்ற அரியணையில் உட்கார்ந்து இருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயம் கிடையாது. இன்றும் ஏராளமான நாயகர்கள் புதிதாக உருவாகி கொண்டே இருந்தாலும் ரஜினிகாந்த் தொட்ட இடத்தை அவர்களால் தொட முடியாது.
அதே போல, ரஜினிகாந்த் நடித்த முக்கியமான மாஸ் திரைப்படம் என்றால் நிச்சயம் பாட்ஷாவை சொல்லலாம். சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்த திரைப்படத்திற்கு பின்னர் ஏராளமான இந்திய திரைப்படங்கள் பாட்ஷா படத்தின் பாணியை பின்பற்றி வெளியாகி பெரிய அளவில் ஹிட்டாகவும் செய்திருந்தது. அதற்கெல்லாம் விதை போட்ட பாட்ஷா திரைப்படம், பல ரசிகர்களுக்கு ரஜினிகாந்தின் ஃபேவரைட் திரைப்படமாகவும் அமைந்திருந்தது.
அப்படி இருக்கையில் பாட்ஷா திரைப்படம் குறித்து பிரபல இயக்குனர் ஒருவர் ரஜினியிடமே குறை கூறிய விஷயம் தற்போது இணையத்தை அதிகமாக ஆக்கிரமித்து வருகிறது. இன்று டிசம்பர் 12 (12.12.2023) ரஜினிகாந்த் பிறந்த நாள் என்பதால் அவர் தொடர்பான பல்வேறு பழைய காணொளிகள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி உள்ளது. அந்த வகையில் பிரபல இயக்குனரும் நடிகர் ரஜினிகாந்தை வைத்து முத்து, படையப்பா, லிங்கா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவருமான இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் பாட்ஷா படத்தின் Preview ஷோ சமயத்தில் நடந்த சம்பவம் ஒன்றை காணொளியில் நினைவு கூர்ந்துள்ளார்.

இது தொடர்பாக ஒரு நேர்காணலில் பேசி உள்ள இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார், “பாட்ஷா படத்தில் Preview காட்சி பார்ப்பதற்காக எனக்கு அழைப்பு வந்திருந்தது. அப்போது நான் படத்தை பார்த்து விட்டு நேராக ரஜினியிடமே படம் நன்றாக இருக்கிறது என்றும் ஆனால் சில குறைகள் இருப்பதாகவும் சுட்டிக் காட்டினேன். உதாரணத்திற்கு வில்லன் ரகுவரனுக்கு மட்டும் படத்தில் வயதாகிக் கொண்டே இருக்கும். ஆனால் ரஜினி இளமையாக இருப்பார்.
இது போன்ற குறைகளை நான் நேரடியாக ரஜினி சாரிடமே சொன்னேன். அதன் பின்னர் முத்து படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு எனக்கு வந்தது. ரஜினிகாந்த் என்னை அழைத்து ஒரு ஒன் லைன் சொல்ல அதை படமாக மாற்றலாம் என்று யோசனை கூறினார். அப்படி தான் முத்து திரைப்படம் உருவாகியது” என கே.எஸ். ரவிக்குமார் கூறி உள்ளார்.
நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

