பொதுவாக, திரைப்படத்தில் மூழ்கி இருக்கும் இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் இதர கலைஞர்கள் பலரும் தங்கள் தனிப்பட்ட விஷயங்களுக்கு இடம் கொடுக்காமல், படைப்புக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து பணிபுரிவார்கள். அந்த வகையில், இந்திய சினிமாவில் பல கலைஞர்களை நாம் சொல்லலாம். அதில் முக்கியமான ஒரு கலைஞர் தான் வி. சாந்தாராம்.
ஹிந்தி மற்றும் மராத்தி மொழிகளில் அதிக திரைப்படம் இயக்கி உள்ள வி. சாந்தாராம், தனது முதல் திரைப்படமான நேதாஜி பல்கர் என்ற படத்தை கடந்த 1927 ஆம் ஆண்டு இயக்கி இருந்தார். தொடர்ந்து, பல்வேறு திரைப்படங்கள் இயக்கி உள்ள நேதாஜி பல்கர், கடந்த 1985 ஆம் ஆண்டு தாதாசாஹிப் பால்கே விருதினையும் வென்றிருந்தார்.
அந்த அளவுக்கு பலரையும் கவர்ந்த உன்னதமான படைப்புகளை கொடுத்துள்ள சாந்தாராம், இயக்குனராக மட்டுமில்லாமல், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவராகவும் விளங்கி இருந்தார். அதே போல, சாந்தாராமின் மனைவி மற்றும் மகள் ஆகியோரும் திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளனர். இதனிடையே, சாந்தாராம் இயங்கி வந்த திரைப்படத்திற்கு நடுவே நடந்த சம்பவம் தொடர்பான சுவாரஸ்ய செய்தி ஒன்றை பற்றி தற்போதும் காணலாம்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் வேலை என்றால் நேர்த்தியாக கவனம் சிதறாமல் பணிபுரிபவர் வி, சாந்தாராம். அப்படி அவர் ஒரு திரைப்படத்தை இயக்கி கொண்டிருந்த போது, அந்த படத்தின் நாயகி தனது கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்து கொண்டிருந்துள்ளார். இதனை வி. சாந்தாராம் கவனிக்க, மீண்டும் ஒரு சில முறை நாயகி நேரம் பார்த்து கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என்றும் சாந்தாராம் முடிவு செய்துள்ளார். தனது தயாரிப்பு நிர்வாகியை அழைத்து இன்று படப்பிடிப்பு போதும் என கூற, அவரோ காரணம் புரியாமல் குழம்பி போயுள்ளார். அதே போல, படத்தின் கதாநாயகியும் ஏன் திரைப்படத்தை தற்போது நிறுத்துகிறீர்கள் என்றும் இன்னும் நேரம் அதிகம் உள்ளதே என்றும் கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த சாந்தாராம், நீங்கள் இரண்டு, மூன்று முறை கை கடிகாரத்தை திருப்பி பார்த்ததாகவும் அதனால் உங்களுக்கு ஏதேனும் அவசர வேலை இருக்கும் என்ற காரணத்தினால் படப்பிடிப்பை நிறுத்தியதாக கூற, என்ன செய்வதென புரியாமல் ஹீரோயினும் குழம்பி போயுள்ளார். தனக்கு அப்படி ஒன்று அவசரம் எதுவும் இல்லை என நடிகை விளக்கம் கொடுத்ததுடன், தற்செயலாக தான் கடிகாரத்தை பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
என்ன காரணங்கள் சொல்லி பார்த்தும் அந்த நாளில் பின்னர் படப்பிடிப்பு நடைபெறவில்லை. மேலும், அதில் ஹீரோயினாக நடித்தவர் வேறு யாருமில்லை. சாந்தாராமின் மனைவி சந்தியா தான் என்பது கூடுதல் சுவாரஸ்ய தகவல்.