தமிழ் சினிமாவில் சில திரைப்படங்கள் அதிக எதிர்பார்ப்புடன் வந்து ரசிகர்கள் மத்தியில் மிக மோசமான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாகவும் அதிக நஷ்டத்தை சந்திக்கும். இந்த ஆண்டு கூட பெரிய நடிகர்களின் நிறைய திரைப்படங்கள் அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வியடைந்த படங்களை நாம் அதிகம் கவனத்திருப்போம்.
ஆனால் அதே நேரத்தில் அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருக்கும் நிறைய திரைப்படங்கள், திரையரங்கில் வெளியானதுக்கு பின்னர் மக்கள் ஆதரவை பெறுவதுடன் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாக மாறும் அளவுக்கு பெயர் எடுத்திருக்கும். அதில் கடந்த ஒரு சில ஆண்டுகளில் சசிகுமார் நடித்த சில திரைப்படங்களையும் நாம் சொல்லலாம்.
தொடர்ச்சியாக வெற்றி படங்கள்
இயக்குனராக கலக்கிய சசிகுமார் தொடர்ச்சியாக தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க, நாயகனாக நடித்த பல திரைப்படங்கள் மோசமான தோல்வியை தழுவியது. ஆனால் கடைசியாக சசிகுமார் நடிப்பில் வெளியான மூன்று திரைப்படங்களான அயோத்தி, கருடன் மற்றும் நந்தன் ஆகியவை விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதில் சசிகுமார் நடிப்பில் உருவான அயோத்தி திரைப்படம் வெளியானதும் அதிக ஆதரவை பெறவில்லை என்றாலும் திரையரங்கில் மக்கள் கூட்டம் கூடியதற்கு பின்னர் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருந்தது. மனித நேயம் மற்றும் மனித உறவுகளுக்கு இடையே இருக்கும் பாச பந்தத்தை மிக எதார்த்தமாக பார்ப்பவர்கள் கண்ணீர் விடும் அளவுக்கு சிறப்பாக திரையில் உருவாக்கி இருந்தார் அறிமுக இயக்குனர் ஆர். மந்திர மூர்த்தி.
அயோத்தி செய்த அற்புதம்
சசிகுமார், ப்ரீத்தி அஸ்ராணி என இந்த திரைப்படத்தில் நடித்திருந்த அனைவருமே மிக உணர்வுபூர்வமாக நடித்திருந்ததால் ரசிகர்களும் இந்த படைப்பை வியந்து பார்த்திருந்தனர். மேலும் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் சிறந்த படமாகவும் அமைந்திருந்தது அயோத்தி. இதனிடையே அயோத்தி திரைப்படத்தில் சசிகுமார் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஆர் ஜே பாலாஜி தான் முதலில் நடிக்க இருந்ததாக ஒரு தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக சமீபத்தில் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் பேசி இருந்த ஆர் ஜே பாலாஜி அயோத்தி திரைப்படத்தின் வாய்ப்பு முதலில் தனக்கு தான் வந்ததாகவும் ஆனால் சில காரணங்களால் அந்த படத்தை நிராகரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அயோத்தி திரைப்படம் வெளியானதற்கு பின்னர் அதனை தவறவிட்டதை நினைத்து பலமுறை வருந்தி உள்ளதாகவும் ஆர் ஜே பாலாஜி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.