தென் இந்திய சினிமாவில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஒரு சில படங்களில் மக்கள் மனதில் இடம்பிடித்து பிரபலம் அடைவார்கள். ஆனால், அவர்கள் எதிர்பாராத நேரத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்து அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போடும்.
நடிகை சில்க் ஸ்மிதா உள்ளிட்ட பல நடிகைகள், மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தாலும் அவர்களின் நிஜ வாழ்க்கை முற்றிலும் மர்மங்கள் நிறைந்த வகையில் தான் இருக்கும். சில்க் ஸ்மிதா மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்னும் அதை சுற்றி உறுதியான தகவல்கள் எதுவுமே கிடையாது. பலரும் பல கதைகளை சொல்லி வருகின்றனர்.
அப்படி, கடந்த 1980-களில் தென் இந்திய சினிமாவையே ஒரு நடிகையின் கொலை, உலுக்கி எடுத்திருந்தது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ராணி பத்மினி. பட்டம் பதவி, கனவுகள் கற்பனைகள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ராணி பத்மினி, ஏராளமான சினிமா கனவுகளை சுமந்தபடி இருந்தார். ஆனால், 24 வயதிலேயே அவரது வாழ்க்கை முடிந்து போனது பெரும் துயரம்.
குறுகிய காலத்திலேயே சினிமா துறையில் பிரபலமான ராணி பத்மினி, சென்னையில் தனது தாயாருடன் வசித்து வந்தார். இவரது வீட்டில் டிரைவர் ஜெபராஜ், வாட்ச்மேன் லட்சுமி நரசிம்மன், சமையல்காரர் கணேசன் உள்ளிட்டோர் பணிபுரிந்து வந்தனர். அப்படி இருக்கையில், கடந்த 1986 ஆம் ஆண்டு, இவர்கள் மூவரும் சேர்ந்து ராணி பத்மினி மற்றும் அவரது தாயார் ஆகிய இருவரையும் கொலை செய்ததாக தெரிகிறது.
சினிமாவில் சம்பாதித்த பணம், நகை உள்ளிட்டவற்றை ராணி பத்மினி வைத்திருந்ததை அறிந்து அவர்கள் இந்த திட்டத்தை அரங்கேற்றியதாகவும் தெரிகிறது. ராணி உடலின் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாகவும் தகவல்கள் கூறுகிறது. வீட்டின் கழிவறையில் ராணி பத்மினி மற்றும் அவரது தாயார் உடல்களை கொலையாளிகள் போட்டு விட்டுச் சென்றனர். மேலும் அந்த உடல்களை அழுகிய நிலையில் போலீசார் கண்டெடுத்தனர்.

தொடர்ந்து இந்த கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு மூவரையும் கைது செய்தனர். அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட, பின்னர் மேல்முறையீடு செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாக மாறி இருந்தது. இதில் ஜெபராஜ் ஜெயிலில் இறந்து போக, சிறையில் இருந்து தப்பி ஓடிய கணேசன் பின்னர் கிடைக்கவே இல்லை. தன்னை விடுதலை செய்யும் படி, நரசிம்மன் முறையீடு செய்ய கடந்த 2017 ஆம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளாக ராணி பத்மினி கொலை வழக்கு விசாரணை நீண்டு கொண்டே வந்த சூழலில், கணேசன் சிக்காமல் போனது இன்னும் மர்மமாகவே உள்ளது. அதே போல, தென் இந்தியாவின் சிறந்த நடிகையாக வலம் வர வேண்டிய நடிகை ராணி பத்மினியின் வாழ்க்கை, சில ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

