நடிகை ராஷ்மிகா மந்தண்ணா, கிரிக் பார்ட்டி என்னும் கன்னடத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே மாஸ் ஹிட் ஆக, அம்மணிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின.
அதன்பின்னர் 2018 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் சலோ என்னும் திரைப்படத்தின்மூலம் அறிமுகமானார். தெலுங்கிலும் அம்மணிக்கு ஏக போக வரவேற்பு. கன்னட மொழியில் அறிமுகம் ஆகியிருந்தாலும், தெலுங்கு சினிமாவிலே இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
தமிழ் ரசிகர்கள் பலரும் இவர் எப்போது தமிழ் சினிமாவில் கால் பதிப்பார் என்று ஏங்கியிருக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படமான சுல்தான் படத்தின்மூலம் ராஷ்மிகா தமிழில் கால் பதிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பானது நவம்பர் மாதம் முதல் நடைபெற்றுவந்த நிலையில், ஊரடங்கு காரணமாக தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் தற்போது வீட்டில் இருந்துவரும் ராஷ்மிகா, தனது வீட்டின் அருகே உள்ள பல தெருக்களுக்கு தினமும் சென்று, தெருக்களில் சுற்றி திரியும் நாய்களுக்கு உணவு கொடுத்து வருகிறார்.
இதுகுறித்து அவர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது, “ஊரடங்கு சமயத்தில் வாயில்லாத ஜீவன்கள் பெரிய அளவில் சிரமத்திற்கு ஆளாகின்றன. அனைவரும் வீட்டிற்குள் அடங்கியுள்ள நிலையில், நம் வீட்டின் வெளியே உணவுக்காக சுற்றுத் தெரியும் நாய், பூனைகள் பற்றி நமக்குத் தெரிவதில்லை.
அவைகளால் அதை நம்மிடம் சொல்ல முடியாது. நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும். நாய்களுக்கும், பூனைகளுக்கும் உங்களால் முடிந்த அளவு உணவு கொடுங்கள்.” என்று கூறியுள்ளார்.