ஊறுகா எங்கடா.. பார்சலில் மிஸ்ஸான பொருள்.. கடுப்பில் கஸ்டமர் செஞ்ச விஷயம்.. அதுக்கு இவ்ளோ தொகை கிடைச்சுதா..

By Ajith V

Published:

இன்றைய காலத்தில் ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்து அதனை உண்டு வரும் பழக்கம் நகர மக்கள் மத்தியில் பரவலாக இருந்து வந்தாலும் இன்னும் நிறைய இடங்களில் மக்கள் ஹோட்டலுக்கு சென்று உணவு அருந்துவதையும், பார்சல் வாங்கி வந்து வீட்டில் இருந்து நண்பர்களிடமோ அல்லது குடும்பத்தினராக இருந்து அருந்துவதையும் பெரும்பாலான மக்கள் விரும்பி வருகின்றனர்.

அப்படி ஒரு சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வந்தாலும் இதில் சில அதிர்ச்சியான அல்லது சர்ச்சை நிறைந்த சம்பவங்கள் அரங்கேறுவதும் இருந்து வருகிறது. அதிலும் ஹோட்டல் இருந்து வாங்கி வரும் உணவினை உண்பதனால் சிலருக்கு விபரீத முடிவு உருவாகியிருந்ததும் அதே வேளையில் உடல்நலக் குறைவால் பலரும் மருத்துவமனைக்கு சென்று தொடர் சிகிச்சை பெற்று வருவது பற்றியும் நான் நிறைய கேள்விப்பட்டிருப்போம்.

இதனால் பார்சல் உணவு தொடர்பாக நிறைய விஷயங்களை நாம் சொல்லிக் கொண்டே போகலாம் என்ற நிலையில் தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டத்திலும் அப்படி ஒரு சம்பவம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அரங்கேறி இருந்தது.

விழுப்புரம் மாவட்டத்தின் பழைய பேருந்து நிலையத்தில் நிறைய ஹோட்டல்கள் இயங்கி வருகிறது. அங்கே அமைந்துள்ள உணவகம் ஒன்றிலிருந்து வலுதரெட்டி பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய சாமி என்ற நபர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக 25 சாப்பாடு பார்சல்கள் வாங்கியுள்ளார். இதற்காக மொத்தம் 2,000 ரூபாயையும் அவர் கொடுத்துள்ள நிலையில் அதில் 11 வகையான உணவுப் பொருட்கள் இருப்பதாகவும் ஹோட்டல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதை நம்பி ஆரோக்கிய சாமி சாப்பாட்டை வாங்கிச் செல்ல அதை திறந்து பார்த்த போது ஊறுகாய் இல்லை என்பதும் அவருக்கு தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக உடனடியாக அந்த சம்பந்தப்பட்ட உணவகத்திற்கும் அழைத்து ஆரோக்கியசாமி பேச, அவர்கள் சரியாக பதில் தெரிவிக்கவில்லை என்றும் தெரிகிறது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத அவர், உடனடியாக மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திலும் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

இதனிடையே இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பும் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காமல் ஆரோக்கிய சாமி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் அவர்கள் தீர்ப்பில் குறிப்பிட்டு அந்த ஹோட்டல் நிறுவனத்திற்கு 35,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு அந்த ஊறுகாய்க்கான உரிய தொகையான 25 ரூபாயை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் தீர்ப்பளித்துள்ளனர்.

அடுத்த 45 நாட்களுக்குள் இந்த பணத்தை வழங்காவிட்டால் ஒரு மாதத்திற்கு 9 சதவீதம் வட்டியுடன் தொகையை செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், ஊறுகாயால் ஒரு உணவகத்திற்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது தற்போது தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.