தமிழில் ஒரு சில நடிகைகள் சில குறிப்பிட்ட படங்களில் நடித்துப் புகழ் பெறுகின்றனர். ஆனால் அதற்கடுத்து அவர்கள் சினிமாவில் தலைகாட்டுவதில்லை. ஆனாலும் அவர்கள் நடித்த அந்தக் கதாபாத்திரங்கள் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் அழியாப் புகழை ஏற்படுத்தியிருக்கும். இப்படி தமிழில் சில படங்களில் நடித்து அதன்பின் மலையாளத்தில் புகழ்பெற்ற ஹீரோயின் தான் சாந்தி கிருஷ்ணா.
கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட சாந்தி கிருஷ்ணா அடிப்படையில் பரதநாட்டியக் கலைஞர் ஆவார். பின்னர் மலையாள சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார். இவரது முதல்படம் ஹோமகுண்டம். எனினும் அவர் நித்ர என்ற படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகையானார். தொடர்ந்து மலையாளம், கன்னடப் படங்களில் நடித்தவர் தமிழில் கேப்டன் விஜயகாந்த் நடித்த சிவப்பு மல்லி படத்தின் மூலம் அறிமுகமானார்.
தனது முதல் படத்திலேயே ஹோம்லியான நடிப்பில் அசத்தியிருப்பார். இந்தப் படத்தில் இடம்பெற்ற டூயட் பாடலான ரெண்டு ‘கண்ணம் சந்தன கின்னம்…‘ பாடல் இன்றுவரை இவரை நினைவுப் படுத்திக் கொண்டே இருக்கிறது. அதன்பின் சின்னமுள் பெரியமுள் என்ற படத்தில் நடித்தார்.
இந்த இரண்டு படங்களுக்குப் பின் அவர் நடிப்பில் வெளியான பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம் அவருக்குத் தமிழில் நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ஆனந்த ராகம் கேட்கும்..‘ ‘பூந்தளிர் ஆட..‘ போன்ற சூப்பர் ஹிட் பாடல்கள் அப்போது வானொலியிலும், கேசட்டுகளிலும் சக்கைப் போடு போட்டன.
அதன்பின் சாந்தி கிருஷ்ணாவின் கவனம் மலையாள, கன்னடப் படங்களை நோக்கிச் சென்றது. இதனையடுத்து தமிழில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் வசந்தின் நேருக்கு நேர் படத்தில் சூர்யாவுக்கு அக்காவாக நடித்து கவனம் ஈர்த்தார்.
தொடர்ந்து அவரின் கவனம் மலையாளப் படங்களிலேயே இருந்தது. இடையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் சில நாடகங்களிலும் நடித்தார். இவ்வாறு மலையாளத் திரையுலகின் முக்கிய நடிகையாக இருக்கும் சாந்தி கிருஷ்ணா பிரபல இயக்குநரான சுரேஷ் கிருஷ்ணாவின் உடன்பிறந்த சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சாந்தி கிருஷ்ணா கணவர் மற்றும் இரு பிள்ளைகளுடன் பெங்களுரில் வசித்து வருகிறார்.