தமிழ் சினிமாவில் மற்ற இயக்குனர்களுடன் இருந்து வேறுபட்டு தனக்கான ஒரு கதை சொல்லும் விதத்தை தொடர்ந்து கடைபிடித்து வருபவர் தான் இயக்குனர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக காலடி எடுத்து வைத்த மிஷ்கின், அதன் பின்னர் அஞ்சாதே, நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை இயக்கி உள்ளார்.
சமீப காலமாக இயக்கம் மட்டும் இல்லாமல் நடிப்பிலும் பெரிய அளவில் கவனம் செலுத்தி வரும் மிஷ்கின், தனது இயக்கத்தில் உருவான திரைப்படங்களில் நடித்து வருவதுடன் மட்டும் இல்லாமல் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதனிடையே தொடர்ந்து தனது அடுத்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியை இயக்கி வரும் நிலையில் இந்த படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தான் உருவாகி வருகிறது.
மிஷ்கின் கதை சொல்லும் விதமும், அவரது திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்களில் வாழ்க்கை முறை மற்றும் நடிப்பு என பல்வேறு விஷயங்கள் அனைத்து திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு இருப்பதால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மிக முக்கியமான இடத்தையும் பிடித்துள்ளார் மிஷ்கின்.
இந்த நிலையில் தான் அஞ்சாதே திரைப்படத்தில் பிரபல நடிகர் பாண்டியராஜனை மீசை இல்லாமல் நடிக்க சம்மதம் தெரிவிக்க வைத்த தகவலை பற்றி ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார் மிஷ்கின். “நான் பாண்டியராஜனிடம் அஞ்சாதே கதையை சொன்னதும் இதில் எந்த கேரக்டரில் நான் நடிக்கிறேன் என என்னிடம் கேட்டார். முதலில் அவரை நான் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதாக நினைத்து விட்டார்.
நான் மீசை இல்லாமல் வரும் கதாபாத்திரத்தை சொன்னதும் நடிக்க ஒத்துக்கவே இல்லை. நான் கொலை செய்தால் எப்படி ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என என்னிடம் பாண்டியராஜன் சார் கேட்க, அனைவரும் உங்களை ஏற்றுக் கொள்வார்கள் என அவரை சமரசம் செய்தேன்.
அதன் பின்னர் சரி என்று சொன்னதும் நான் மீசையை எடுக்க வேண்டும் என கூறினேன். உடனே வெளியே போ என சொல்லிவிட்டார். 17 வயது முதல் மீசையே எடுத்ததில்லை என்றும் கூறிய அவரை எப்படியோ சமாதானம் செய்து படத்தில் நடிக்க வைத்தேன். ஷூட்டிங் முழுக்க ஏன்டா இந்த படத்தில் நடித்தோம் என்பது போன்று முறைப்பான முகத்தை தான் வைத்திருந்தார்.
ஆனால், படம் ரிலீசாகி மூன்றாவது நாள் நல்ல ஹிட் ஆனதும் அலுவலகம் வந்து எனக்கு மோதிரம் அணிவித்தார் பாண்டியராஜன். ‘இப்படி இருக்கும் என எனக்கு தெரியாது மிஷ்கின்’ என பாண்டியராஜன் கூறினார். எனக்கும் சத்தியமா தெரியாது என நானும் கூறினேன்” என அந்த தருணத்தை மிஷ்கின் நினைவு கூர்ந்துள்ளார்.