பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக பாண்டியன் குடும்பத்தினர் சிறையில் இருந்து ஜாமினில் வீடு திரும்பியுள்ளனர். விடுதலையானதும் பாண்டியன் தனது மைத்துனர்களான முத்துவேல் மற்றும் சக்திவேலிடம் நெகிழ்ச்சியுடன் மௌனமாக நன்றி தெரிவித்தார்.
“நீ என் உடன்பிறப்பு, உனக்கு ஒரு பிரச்சனை என்றால் நான் வராமல் இருப்பேனா?” என்று முத்துவேல் பாசத்துடன் கோமதியை தேற்றியது, இரு குடும்பங்களுக்கும் இடையே துளிர்விடும் ஒற்றுமையை காட்டியது. வீடு திரும்பிய சரவணன், தனது வாழ்வை சீரழித்த தங்கமயிலை இனி ஒருபோதும் வீட்டிற்குள் அனுமதிக்க முடியாது என்று ஆவேசமாக முடிவெடுத்துள்ளார்.
இருப்பினும், தங்கமயிலின் தாய் பாக்கியம் தனது நரித்தனமான ஆட்டத்தை மீண்டும் தொடங்கவுள்ளார். இந்த வழக்கில் தங்களுக்கு பின்னடைவு ஏற்படும் என்பதை உணர்ந்துள்ள அவர், இப்போது பணத்தின் மீது தனது பார்வையை திருப்பியுள்ளார். ஏற்கனவே 80 பவுன் நகை போட்டதாக பொய் சொன்னவர், இப்போது அந்த நகைகளை திரும்ப கேட்டுக் கலாட்டா செய்யப்போகிறார். அந்த நகைகளை விற்றால் கிடைக்கும் சுமார் 80 லட்சம் ரூபாயை வைத்து தனது இரண்டாவது மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி விடலாம் என்பது பாக்கியத்தின் கணக்காக இருக்கிறது.
அடுத்தகட்டமாக, சரவணன் விவாகரத்து வேண்டுமென்றால் பாண்டியனின் மளிகை கடையை தனது மகள் பெயருக்கு எழுதித் தர வேண்டும் என்று பாக்கியம் மிரட்ட வாய்ப்புள்ளது. இல்லையெனில், பராமரிப்பு செலவாக மாதம் தோறும் 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று நிபந்தனை விதிப்பார். மகளின் திருமண வாழ்க்கை முறிந்தாலும் பரவாயில்லை, அதன் மூலம் பாண்டியன் குடும்பத்தின் ஒட்டுமொத்த சொத்தையும் கறந்துவிட வேண்டும் என்பதே பாக்கியத்தின் கள்ளத்தனமான எண்ணம்.
மளிகை கடையை தனது உயிராக கருதும் பாண்டியனுக்கு பாக்கியத்தின் இந்த பேராசை பேச்சுகள் பேரிடியாக அமையும். தனது வியர்வையாலும் உழைப்பாலும் உருவாக்கிய சொத்துக்களை ஒரு பொய்யான குடும்பத்திற்காக விட்டுக்கொடுக்க பாண்டியன் சம்மதிக்கப்போவதில்லை. பாக்கியத்தின் இந்த புதிய ‘ஏழரையை’ பாண்டியன் தனது மைத்துனர்களின் உதவியுடன் சட்ட ரீதியாக எப்படி முறியடிக்க போகிறார் என்பதுதான் வரும் வாரங்களில் அனல் பறக்கப்போகும் திருப்பம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
