80 களில் மிக பிரபலமான முன்னணி இயக்குனர்களில் ஒருவர் தான் கே. பாக்கியராஜ். இயக்குனர் மட்டுமல்லாமல் திரைக்கதை அமைப்பாளர், வசன எழுத்தாளர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகங்களைக் கொண்டவர். இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.
1979 ஆம் ஆண்டு ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ‘மௌன கீதங்கள்’, ‘இன்று போய் நாளை வா’ போன்ற நல்ல விமர்சனங்களைப் பெற்ற திரைப்படங்களை இயக்கினார்.
1982 ஆம் ஆண்டு ‘முந்தானை முடிச்சு’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் வாயிலாக புகழின் உச்சத்திற்கு சென்றார். தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளிலும் இத்திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்று வெள்ளி விழா கொண்டாடியது. நடிகை ஊர்வசி அறிமுகமானது இத்திரைப்படத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அது தவிர பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார் கே. பாக்கியராஜ் அவர்கள். சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, SIIMA வின் வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகியவற்றை வென்றவர். இந்நிலையில், தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் மோகன் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் ‘ஹரா’. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட கே. பாக்கியராஜ் அவர்கள் நடிகர் மோகனைப் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.
அவர் கூறியது என்னவென்றால், நடிகர் மோகனை மாதிரி பாடலுக்கு எக்ஸ்ப்ரஷன் கொடுக்க யாராலும் முடியாது. SPB அவர்களின் குரல் கச்சிதமாக மோகனுக்கு பொருந்தும். அந்த நேரத்தில் இவரது படத்தின் பாடல்களில் மோகன் நடிப்பதைப் பார்த்து உண்மையிலேயே மோகன் தான் அந்த பாட்டை பாடியுள்ளார் என்று மக்கள் கூறுவார்கள். பார்வையாளர்களின் நாடி நரம்பெல்லாம் துடிக்கும் அளவுக்கு பாட்டின் ஒவ்வொரு வரிக்கும் எக்ஸ்ப்ரஷன் கொடுப்பார் மோகன், எல்லோராலும் இந்த மாதிரி நடிக்க முடியாது என்று நடிகர் மோகனைப் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார் கே. பாக்கியராஜ்.