தமிழ்த்திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டார், முடிசூடா மன்னர் யார் என்றால் அது எம்.கே.தியாகராஜ பாகவதர் தான். அன்றைய காலகட்டத்தில் இவருடைய படங்கள் என்றாலே மாபெரும் வெற்றி தான். இவருடன் சமகாலப் போட்டியாளராக இருந்த பியு.சின்னப்பா கூட இவரை மிஞ்சவில்லை. பாகவதரைப் போல அவரும் சிறப்பாக பாடல் பாடுவார்.
இருவருக்கும் ஒரே மாதிரியான ஹேர் ஸ்டைல் என போட்டி ரொம்பவே டஃப்பாக இருக்கும். ஆனாலும் இவர்களில் ஒரு படி மிஞ்சி நின்றவர் தியாகராஜ பாகவதர் தான். அதனால் தான் அவர் தமிழ்த்திரை உலகின் முதல் சூப்பர்ஸ்டார் என்றே அழைக்கப்பட்டார்.
இவர் நடித்த முதல் படம் பவளக்கொடி. 1934ல் வெளியானது. அம்பிகாபதி, சாரங்கதாரா, சத்தியசீலன், சிந்தாமணி, திருநீலகண்டர், அசோக்குமார், சிவகவி, ஹரிதாஸ் படங்களைப் பார்த்தால் அப்பவே இவ்ளோ திறமையாக நடித்துள்ளாரே என்று நம்மை வியக்க வைக்கும்.
எந்த ஒரு முடிவையும் சரியான நேரத்தில் எடுக்க வேண்டும். அப்படி எடுக்கலைன்னா அதனால் எந்தப் பலனும் ஏற்படாது என்பதை விளக்கும் வகையில் தமிழ்த்திரை உலகில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
ல்ட்சுமிகாந்தன் கொலைவழக்கில் தயாரிப்பாளர் ஸ்ரீராமுலு நாயுடு, என்எஸ்கே ஆகியோரோடு எம்.கே.தியாகராஜபாகவதரும் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் தியாகராஜ பாகவதர் கைதாவதற்கு முன்னால் அவரது திரைப்படங்கள் எல்லாம் மிகப்பெரிய வெற்றி பெற்றன.
அதனால் பல தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு அவருக்கு முன்பணம் கொடுத்து இருந்தனர். அவருடைய வழக்கு நடந்து கொண்டு இருக்கும்போதே பல தயாரிப்பாளர்கள் அவரிடம் இருந்து முன்பணத்தை வாங்க ஆசைப்பட்டார்கள். பலர் அவரைத் தரும்படி நிர்பந்தித்தார்கள்.
அதனால் எம்.கே.தியாகராஜ பாகவதர் மனம் உடைந்து போனார். அந்தவகையில் என்எஸ்கே. பக்குவமான மனிதர் என்பதால் அதை சர்வசாதாரணமாக எடுத்துக் கொண்டார். ஒரு காலகட்டத்தில் இந்த வழக்கில் இருந்து தியாகராஜ பாகவதர் விடுவிக்கப்பட்டார்.
அப்போது அந்தத் தயாரிப்பாளர்கள் கூட்டம் அவரை நோக்கி ஓடி வந்தது. எங்கள் படங்களில் நடிக்க வேண்டும் என்றது. அதற்கு பாகவதர் இனி நான் படங்களிலேயே நடிப்பதாக இல்லை. கச்சேரி மட்டும் தான் பண்ணப் போகிறேன் என்றார்.
அப்படி அறிவிக்க முக்கியமான காரணம் அவருக்குள் ஏற்பட்டு இருந்த விரக்தி தான். அவர் அறிவித்தாலும் சபாக்கள் மத்தியில் அவருக்கு வரவேற்பு இல்லை. அதனால் மனம் புழுங்கிய பாகவதர் மீண்டும் நடிப்பது என்று முடிவு எடுத்தார். அப்போது யாரும் அவரை வைத்து படம் எடுக்க முன்வரவில்லை.
அதனால் தானே சொந்தமாக ‘ராஜமுக்தி’ என்ற படத்தை எடுத்தார். அது படுதோல்வி அடைந்தது. பாகவதரின் சரிவுக்கும் காரணமாக அமைந்தது என்றே சொல்லலாம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.