உலகின் சிறந்த 100 திரைப்படங்களில் ஒன்றாக விளங்கும் நாயகன் திரைப்படம் இந்திய சினிமா வரலாற்றையே புரட்டிப் போட்ட ஒரு திரைப்படம். மணிரத்னம் இயக்கத்தில், முக்தா சீனிவாசன் தயாரிப்பில், கமல்ஹாசன் நடிப்பில், பாலகுமாரன் வசனத்தில், இளையராஜா இசையில், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் வெளியான நாயகன் திரைப்படம் தமிழகத்திலிருந்து மும்பை சென்று அங்கே மிகப்பெரிய தாதாவாக மாறிய வரதராஜ முதலியாரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்.
இதில் வேலுநாயக்கராக கமல்ஹாசன் வாழ்ந்திருப்பார். இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நாயகன் மூன்று தேசிய விருதுகளை வென்றது. மேலும் பல விருதுகளையும் அள்ளிக் குவித்தது. நாயகன் படத்தின் பின்னணி இசையே படத்தை வேறு கோணத்தில் சென்று சேர்த்திருக்கும். ஒவ்வொரு இசையும் புல்லரிக்க வைக்கும். இப்படி தமிழின் ஒரு பொக்கிஷ திரைப்படமாக விளங்கும் நாயகன் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் படம் முழுக்க வருபவர் ஜனகராஜ்.
கமல் சக்திவேலாக இருக்கும் போதும் வேலு நாயக்கராக மாறும்போதும் கமலுடன் உற்ற துணையாக வருவார். இவருக்காகவே படத்தில் எடுக்கப்பட்ட ஒரு பாடல்தான் நிலா அது வானத்து மேலே… பாடல். இளையராஜாவின் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடலுக்கான வரிகளை எழுதியவர் இளையராஜாவே. மற்ற பாடல்கள் அனைத்தும் புலமைப்பித்தன் எழுதியிருப்பார்.
பெரிய இயக்குநரின் படத்தால் அதிருப்தி அடைந்த ராமராஜன்.. அன்று எடுத்த அந்த முக்கிய முடிவு
குயிலியின் மீனவப் பெண் நடனமும், ஜனகராஜின் நடிப்பும், கடலில் படகு செல்லும் லொகேஷனும் இந்தப் பாடலை பார்ப்பவர்களுக்கு மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்ட வைக்கும். இந்தப் பாடலில் முதலில் வரும் வரியான நிலா அது வானத்துமேலே வரிக்குப் பிறகு பலானது ஓடத்து மேலே.. என்ற வரியில் பலானது என்ற வார்த்தைக்கு அர்த்தமே கிடையாது.
இருப்பினும் சென்னை வட்டார வழக்கில் பலானது என்ற வார்த்தை அடிக்கடி குறிப்பிடப்படுவதால் இளையராஜா அந்த வார்த்தையைப் போட்டுள்ளார். மேலும் இதற்குப் பதிலாக வேறு வார்த்தைகளைப் போட்டுப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் எதுவும் திருப்தி இல்லாததால் பலானது ஓடத்து மேலே என்ற வரியைப் போட்டே பாடல் எழுதியிருக்கிறார் இளையராஜா.
ஜனகராஜுக்கு இந்தப் பாடல் பெரும்புகழை ஈட்டிக் கொடுத்தது. இந்தப் பாடலில் நடுக்கடலில் ஷுட்டிங் நடத்தும் போது அனைவருக்கும் கடல் காய்ச்சல் வந்துவிட்டதாம். ஆனால் கமல் மட்டும் சாமர்த்தியமாக ஓரமாக போய் அமர்ந்து கொண்டதால் அவருக்கு கடல் காய்ச்சல் தொற்றவில்லை என பேட்டி ஒன்றில் ஜனகராஜ் கூறியிருக்கிறார்.