மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் 2024 விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை ஜவான் படத்திற்காக வென்றார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தங்க நிற சேலையில் நயன்தாரா விருதுடன் நிற்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. நயன்தாரா மட்டுமின்றி கோலிவுட் பிரபலங்களும் விருதுகளை வென்றுள்ளனர்.
தாதாசாகேப் பால்கே விருது விழா:
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் பாலிவுட்டில் மட்டுமல்ல உலக அளவில் உள்ள ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சென்ற ஆண்டு திரைக்கு வந்த ஜவான் படம் பாக்ஸ் ஆபிஸில் 1100 கோடிக்கு மேல் வசுலை அள்ளியது. இப்படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, சன்யா மல்ஹோத்ரா, பிரியாமணி, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இது நயன்தாராவின் முதல் இந்தி படம் என்பது குறிப்பிடதக்கது.
தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் ஷாருக்கான், ராணி முகர்ஜி, அட்லீ, கரீனா கபூர், அனிரூத், விக்ராந்த் மாஸ்ஸி, நயன்தாரா, ஷாஹித் கபூர், ஆதித்யா ராய் கபூர், சந்தீப் ரெட்டி வங்கா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். பெரும்பாலும் ஜவான் படத்தின் குழுவே விருதுகளைப் பெற்றது.
அட்லீ, நயன் தாரா, அனிருத்துக்கு விருது:
ஜவான் படத்திற்காக சிறந்த நடிகர் விருதை ஷாருக்கான் பெற்றார். சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாரா பெற்றார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை அனிருத் பெற்றார். மேலும் விமர்சர்கள் ரீதியாக சிறந்த இயக்குநருக்கான விருது அட்லீக்கு வழங்கப்பட்டது.
ஜவான் படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்த ஷருக்கான் தான் நயன்தாராவுக்கு விருதையும் வழங்கினார். நயன்தாராவின் கையை பிடித்து மேடைக்கு அழைத்து வந்து நெற்றியில் முத்தமிட்டு விருதை வழங்கி அய்யோடா பாடலுக்கு டான்ஸும் ஆடினார் ஷாருக்கான்.
மேலும், அனிமல் படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான விருதை சந்தீப் ரெட்டி வங்கா பெற்றார், சிறந்த வில்லனுக்கான விருதை பாபி தியோல் பெற்றார். ஜவான் படத்தை தொடர்ந்து அனிமல் படமும் 900 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்தது குறிப்பிடதக்கது. அனிமல் படம் பல விமர்சனங்களை சந்தித்துருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
நயன்தாரா பாலிவுட்டில் தனது முதல் படத்திலேயே விருதை வென்றுவிட்டார். அதே போல அட்லீ மற்றும் அனிருத்தும் விருதுகளை வென்று கெத்துக் காட்டியுள்ளனர். ஜவான் படத்தில் நர்மதா எனும் போலீஸ் அதிகாரியாக தனது அசாதரண நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். கடந்த ஆண்டு நயன்தாராவின் நடிப்பில் வெளியான இறைவன், அன்னபூரணி உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை அடையவில்லை என்றாலும் ஜவான் படத்தில் நடித்து பாலிவுட்டில் சிறந்த நடிகைக்கான விருதையே பெற்றுவிட்டார். இதை தொடர்ந்து பலரும் நயன்தாராவை பாராட்டியும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தும் வருகின்றனர்.