இந்திய சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகராக இருக்கும் நடராஜ் சுப்பிரமணியம், நடிகர் விஜய் ஒரு முறை எப்படி பொய் சொல்ல வேண்டும் என கற்றுக் கொடுத்தது பற்றி தெரிவித்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்று வருகிறது. தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளவர் தான் நட்டு என்னும் நடராஜ் சுப்பிரமணியம்.
ஒரு காலத்தில் ஒளிப்பதிவாளராக பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ள நட்டி, தமிழ் சினிமாவில் மிளகா உள்ளிட்ட பல திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். தற்போது வரை ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் என 2 பணிகளிலும் கவனம் செலுத்தி பணியாற்றி வரும் நட்ராஜின் நடிப்பு பயணத்தில் சதுரங்க வேட்டை, கர்ணன், மகாராஜா உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல பெயரை வாங்கி கொடுத்துள்ளது.
விஜய்யின் 2 படங்கள்
இவர் விஜய்யுடன் எந்த திரைப்படங்களிலும் இணைந்து நடிக்கவில்லை என்றாலும் அவர் தமிழில் ஒளிப்பதிவு செய்த யூத் மற்றும் புலி திரைப்படங்கள் விஜய் நடித்தது தான். மேலும் விஜய்யின் துப்பாக்கி படத்திலும் ஒரு பாடலுக்கு மட்டும் நட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனிடையே, யூத் படத்தில் பணியாற்றிய போது விஜய்யிடம் பொய் சொல்லி மாட்டிக் கொண்டது பற்றி சில கருத்துக்களை நட்ராஜ் ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
“யூத் படத்தில் ஒரு காட்சியை காலை முதல் மாலை வரை எடுத்து விட்டோம். அதில் ஒரு தவறு நடந்து விட்டது. ஒளிப்பதிவாளராக நானோ அல்லது படக்குழுவினரோ யாரும் அதை கவனிக்கவில்லை. அந்த காலத்தில் ஃபிலிம் என்பதால் காட்சியை பின்னர் பார்த்த போது நடிகையின் புடவை மாறிப் போனது தெரிய வந்தது. இதனால் கன்டினியுட்டி மிஸ்ஸாக, மதிய சாப்பாடு முடித்து விட்டு வந்த விஜய்யிடம் இது பற்றி நான் தயக்கத்துடன் பேசினேன்.
பொய் சொல்லி மாட்டிய நடராஜ்
அதில் புடவை மாறிய தவறை நான் சொல்லாமல் ஃபிலிமில் தவறு உருவானதாக பொய் சொல்லி விட்டேன். சுமார் 6 மணி நேரம் எடுத்த காட்சியை திரும்ப எடுக்க வேண்டும் என்ற நிலை வர, விஜய்யும் அன்று மாலை வெளியூர் போய்விட்டு 10 நாட்கள் கழித்து திரும்புவதாக இருந்தது. ஆனால், நாங்கள் வேகமாக லைட் எல்லாம் செட் செய்து மாலைக்குள் அந்த காட்சியை திரும்ப எடுத்து முடித்து விட்டோம்.
ஷூட்டிங் முடித்து விட்டு என்னை தனியாக அழைத்த விஜய், ‘பொய் சொல்ல தெரிந்தால் சொல்லுங்கள். இல்லையென்றால் சொல்லாதீர்கள்‘ என கூறினார். அதில் நடிகையின் புடவை மாறிப் போனது தான் பிரச்சனை என்பதையும், ஃபிலிமில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை விஜய் தெரிந்து கொண்டார். அதன் பின்னர் விஜய் அந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை” என நட்ராஜ் கூறினார்.