இசைஞானியின் மாஸ்டர் பீஸ் படங்களில் சிலவற்றை எடுத்துக் கொண்டால் அதில் அவதாரம் படமும் கண்டிப்பாக இருக்கும். இசைக்காகவே உருவாக்கப்பட்ட படம். பன்முக நடிகராக நாசர் பிஸியாக ஜொலித்துக் கொண்டிருந்த காலம் அது. அன்றைய காலகட்டத்தில் வெளியாகிக் கொண்டிருந்த படங்களில் பாதிப்படங்களில் நாசர் கண்டிப்பாக நடித்திருப்பார்.
சிறந்த குணச்சித்திர, வில்லன் நடிப்பில் கலக்கிக் கொண்டிருந்தார் நாசர். சென்னை திரைப்படக் கல்லூரியில் நடிப்புப் பயிற்சி, கூத்துப் பட்டறை நடிப்புப் பயிற்சி என சகலவற்றிலும் நடிப்பில் ஊறிப்போன நாசருக்கு நடிப்பினைத் தாண்டி இயக்குநர் ஆர்வம் தொற்றிக் கொண்டது.
எந்தக் கதையை எடுக்கலாம் என யோசித்தவருக்கு நடிப்பின் மூலமான கூத்துப்பட்டறைக் கதையைத் தேர்வு செய்தார். கூத்துக் கலைஞனின் வாழ்க்கையையும், அவனுக்குள் ஏற்படும் காதலையும் மையமாக வைத்து அவதாரம் படத்தின் கதையை உருவாக்கினார். அனைத்தும் தயாரான நிலையில் இசைக்காக இசைஞானி இளையராஜாவினைச் சந்தித்திருக்கிறார்.
அப்போது இளையராஜா நாசரிடம் இப்போது வருகிற பாதிப் படங்களில் நீ நடித்திருக்கிறாய், இப்பொழுது ஏன் இயக்குநர் ஆசை, சிறிது காலம் தள்ளிப் போடலாமே என்றும், கூத்துப் பட்டறை கதையும் வெற்றி பெறுமா என்ற சந்தேகத்திலும் கேட்டிருக்கிறார். பிறகு இளையராஜாதான் இசை என்று முடிவான பிறகு மொத்த படத்தினையும் எடுத்து முடித்து இளையராஜாவிடம் போட்டுக் காட்டியிருக்கிறார் நாசர்.
ஏ. ஆர். ரஹ்மான் ஆஸ்கர் வென்று திரும்பிய நாளில்.. வெறித்தனமான ரசிகனாக அனிருத் செஞ்ச விஷயம்..
படத்தினைப் பார்த்த இளையராஜா அவரை வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கிறார். வீட்டிற்கு வந்ததும் நாசரை வரவேற்று இந்தப் படம் மிக நன்றாக உள்ளது. நானே இசையமைக்கிறேன். அதுவும் நாளையே என்று கூற, அப்போது தயாரிப்பாளர் உள்ளிட்டோர் இல்லாததால் இளையராஜாவுக்குப் பணம் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால் இளையராஜா எதுவே அப்போது வாங்கவில்லை. படத்தினைப் பார்த்து மெய்சிலிர்த்தவர் இரண்டறை நாட்களில் மொத்த படத்தின் இசையையும் முடித்துக் கொடுத்திருக்கிறார்.
நாசர், ரேவதி உள்ளிட்டோர் நடித்த அவதாரம் திரைப்படம் 1995-ல் வெளியானது. பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. குறிப்பாக தென்றல் வந்து தீண்டும் போது பாடல்.. எவர் கிரீன் ஹிட் லிஸ்ட்டில் இணைந்தது. அதனை நாசர் படமாக்கிய விதம் பாடலை வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்றது. மேலும் குப்பண்ணா குப்பண்ணா.., ஒரு குண்டு மல்லி…, ஆகிய பாடல்கள் அப்போது தொலைக்காட்சிகளில் ரிபீட் மோடில் ஒளிபரப்பானது. நாசரின் இயக்குநர் திறமையையும் வெளிக் கொண்டு வந்தது அவதாரம் திரைப்படம். மேலும் தமிழக அரசின் சிறந்த திரைப்படத்திற்கான விருதினையும் வென்றது.