இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் நம்ம வீட்டுப்பிள்ளை. இந்தத் திரைப்படம் அண்ணன் தங்கை பாசத்தினை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படமாகும்.
மிகவும் எதார்த்தமான நடையில் அண்ணன் தங்கை உறவு, கூட்டுக் குடும்ப உறவுகள் போன்றவற்றினைக் காட்டி இருப்பார்.
இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, அனு இம்மானுவேல், பாரதிராஜா, மைனா நந்தினி, நட்டி என்ற நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.
அப்பா இல்லாமல் அம்மா மற்றும் தாத்தாவுடன் வசிக்கும் சிவகார்த்திகேயன் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் சித்தப்பா, பெரியப்பா வீடுகளிடம் அனுமதி பெறுவது, அவர்கள் இவர்களை மதிக்காத விதம் போன்றவை மனதினை உருக்கும் காட்சிகளாக இடம்பெற்றிருக்கும்.
சிவகார்த்திகேயனும் ஐஸ்வர்யா ராஜேஷும் உடன்பிறந்தவர்கள் இல்லை என்பதும் சிவகார்த்திகேயனின் தந்தையான சமுத்திரக் கனியின் நண்பர் மகள்தான் ஐஸ்வர்யா என்பதும் ஃப்ளாஷ்பேக்கில் தெரிய வரும்.
ஐஸ்வர்யா சிவ கார்த்திகேயனுக்கு எதிரியான நடராஜை சூழ்நிலைக்காக திருமணம் செய்கிறார், அதன்பின்னர் மாமன் மச்சானுக்கு இடையே நடைபெறும் பிரச்சினைகளை எதார்த்தமான பாணியில் கூறியவிதம் ரசிகர்களைக் கவரும் விதம் அமைந்திருக்கும்.
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை தவிர்த்து தோல்விப் படங்களை மட்டுமே கொடுத்துவந்த சிவகார்த்திகேயனுக்கு இது வெற்றிப் படமாக அமைந்துள்ளது.