ஹைதராபாத்: நாக சைதன்யா சோபிதா துலிபாலா திருமணம் ஹைதராபாத்தில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் திருமண பரிசாக, நாக சைதன்யாவின் தந்தை, நாகர்ஜுனா ரூபாய் 2.5 கோடிகள் செலவில், சொகுசுக் காரான லக்சாஸ் காரினை வாங்கிக் கொடுத்துள்ளார். புதுமணத் தம்பதியருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகை சமந்தாவை கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா நான்கு ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்று சட்டப்பூர்வமாக பிரிந்தனர். சமந்தா உடனான விவாகரத்துக்குப் பிறகு சோபிதா துலிபாலாவை காதலித்தார் நாக சைதன்யா. இவர்கள் இருவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அதன் பின்னர் இவர்களின் திருமணம் பற்றிய பேச்சுதான் சமூக வலைத்தளங்களில் அதிகம் அடிபட்டது. டிசம்பர் 4ஆம் தேதி காலையில் நாக சைதன்யா, சோபிதா துலிபாலா திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. நாகார்ஜுனா குடும்பத்துக்கு சொந்தமான ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நாகசைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவுக்கு தாலி கட்டி மனைவியாக ஏற்றுக்கொண்டார்.
சிரஞ்சீவி, ராம் சரண், ராஜமெளலி உள்ளிட்ட ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணத்துக்கு வந்து மணமக்களை வாழ்த்தியுள்ளனர். இது குறித்து நடிகரும், நாக சைதன்யாவின் தந்தையுமான நாகார்ஜூனா அவரது ட்விட்டரில், ‘இந்த அழகான அத்தியாயத்தை சோபிதாவும் சாயும் ஒன்றாகத் தொடங்குவதைப் பார்ப்பது எனக்கு ஒரு சிறப்பு மற்றும் உணர்ச்சிகரமான தருணமாக இருந்தது.
எனது அன்பான சாய்க்கு வாழ்த்துகள், அன்புள்ள சோபிதா-நீங்கள் ஏற்கனவே எங்கள் வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டு வந்துள்ளீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.