Mysskin about Bala : சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் மிஷ்கின். ஒவ்வொரு இயக்குனர்களுக்கும் ஒரு தனித்தனி ஸ்டைல் இருப்பது போலவே மிஷ்கின் இயக்கும் திரைப்படங்களிலும் கதை சொல்லும் விதத்தில் அவர் ஏற்படுத்தும் தாக்கம் மிக மிக வித்தியாசமாக இருக்கும். நாம் இதுவரை பார்த்து பழகிய கதைகளிலேயே சில வித்தியாசமான விஷயங்களையும், நடிப்பில் நுணுக்கங்களையும் வைத்து மிகப் புதிதாக திரைப்படங்கள் உருவாக்குவதில் அவர் கில்லாடி.
அந்த வகையில் மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, பிசாசு, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், யுத்தம் செய், சைக்கோ என ஒவ்வொரு திரைப்படங்களும் இன்றளவிலும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி தான் வருகிறது. சமீபத்தில் பிசாசு 2 திரைப்படத்தை முடித்திருந்த மிஷ்கின், விஜய் சேதுபதியை வைத்து ட்ரெயின் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
படத்தை ஓட விடல
இதில் அவர் இயக்கிய பிசாசு படத்தின் முதல் பாகத்தை பிரபல இயக்குனர் பாலா தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் உருவாக்கி இருந்தார். இதற்கு காரணமாக இருந்த ஒரு எமோஷனலான சம்பவத்தை பற்றி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் சில கருத்துக்களை மிஷ்கின் பகிர்ந்து கொண்டுள்ளார்.
“நான் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படம் வெளியான சமயத்தில் அது பெரிதாக போகவில்லை. அப்போது ஏதோ ஒரு விதத்தில் அந்த திரைப்படத்தை இயக்குனர் பாலா பார்த்து விட்டார். அவர் படத்தைப் பார்த்துவிட்டு என்னை அழைத்து நேரில் பார்க்க வேண்டும் என கூறினார். அவருடன் படத்தை பார்க்க நான் போகவில்லை. ஏனென்றால் அந்த சமயத்தில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை பெரிதாக போக விடவில்லை.
கண்ணீர் வந்துட்டே இருக்கு
பாலாவை அப்போது பார்த்த போது அவரது இரண்டு கண்களில் இருந்தும் கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. நான் இதுவரையிலும் பாலாவை அப்படி பார்த்ததில்லை. என்னை அழைத்துச் சென்ற பாலா குடிக்கலாமா என்று கேட்டார். இதை விட குடிப்பதற்கு நல்ல தருணம் அமையாது என இரண்டு பேரும் குடித்தோம். அப்படி பாதியில் பாலா என்னிடம், ‘எனக்காக ஒரு படம் செய்து கொடுக்கிறாயா?’ என்று கேட்டார்.
உனக்காக நான் ஒரு படம் செய்தே ஆக வேண்டும் என்றும் கூறினார். அப்படித்தான் நான் பிசாசு படத்தை உருவாக்கினேன். சக கலைஞனை, ஒரு தம்பியாய் நான் கீழே விழுந்த போது எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தான்” என பாலா பற்றி நெகிழ்ந்து பேசினார் மிஷ்கின்.