‘காவியம் மாதிரி எடுக்கிற படத்துல கேவலமா இப்படி ஒரு பாட்டா?’ இயக்குநரிடம் திட்டு வாங்கி ஹிட் பாடல் கொடுத்த யுகபாரதி..

By John A

Published:

தமிழில் கிராமத்து கதைகளுக்கு எப்படி ஒரு பாரதிராஜாவோ அதே போல் மலைகளையும், இயற்கை அழகையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதில் புகழ்பெற்ற இயக்குநர்தான் பிரபு சாலமன். இவர் இயக்கிய முதல படமான கண்ணோடு காண்பதெல்லாம் சுமாரான வெற்றியைப் பெற்றது. அதற்கு அடுத்ததாக இவர் இயக்கிய லீ, கிங், கொக்கி போன்ற படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

சற்று மாற்றி யோசித்தார் பிரபு சாலமன். கதை உருவாக்கத்தில் மெனக்கெட்டு முதன் முதலாக விதார்த்தை கதாநாயகனாகவும், அமலா பாலை ஹீரோயினாகவும் வைத்து தேனி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் எடுக்கப்பட்ட படம் தான் மைனா. 2010-ம் ஆண்டு தீபாவளியன்று வெளியான இந்தப் படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடியது. இந்தப் படத்திற்குப் பின்னால் இயக்குநர் பிரபுசாலமன் தன்னை சினிமா உலகில் முன்னணி இயக்குநராக நிலை நிறுத்தினார்.

இதனையடுத்து இவர் இயக்கிய கும்கி, தொடரி, கயல், காடன் போன்ற படங்களும் பிரபு சாலமனை திரையுலகில் முன்னனி இயக்குநராக உருவெடுக்க வைத்தது.  இவர் இயக்கத்தில் வெளிவந்த மைனா படத்தில் இடம்பெற்ற ஜிங்கி..ஜிங்கி ஜிமிக்கி போட்டு என்ற பாடல் உருவான விதம் குறித்து பாடலாசிரியர் யுகபாரதி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிடுகையில், “மைனா படத்திற்காக காடுமலையெல்லாம் திரிந்து ஷூட்டிங் நடத்திக் கொண்டிருந்தார் இயக்குநர் பிரபு சாலமன். அப்போது அங்கிருந்தவாறே இப்படத்திற்காக ஒரு பாடலை இயற்றும் படி கேட்க நான் தஞ்சை மாவட்டத்து ஊர்களை வைத்து ஜிங்கி..ஜிங்கி என்ற பாடலை இயற்றினேன்.

புதிய பறவை படத்தின் வெற்றிக்குப் பின்னால் இப்படி ஒரு சீக்ரெட்டா? உச்சி நுகர்ந்து பாராட்டிய எம்.ஜி.ஆர்.

அதற்கு இமானும் மெட்டுப்போட்டு அவருக்கு அனுப்ப இயக்குநர் என்ன நான் காவியம் மாதிரி படத்தை எடுக்கிறேன்.. நீங்க ஏன் இப்படி குத்துப் பாடலை எழுதியிருக்கீங்க என்று கடிந்து கொண்டார். மேலும் இந்தப் பாட்டுக்கும் நான் எடுக்கும் படத்துக்கும் எந்த இடத்திலும் சம்பந்தமே வராது இதை நான் எப்படி பயன்படுத்துவது என்று கோபமாகக் கேட்டார். அதன் பிறகு நானும் இமானும் அவரை இந்தப் பாடலை எப்படியாவது படத்தில் சேருங்கள் கண்டிப்பாக ஹிட் ஆகும் என்று கூற அதன்படி மூனாறில் இருந்து தஞ்சைக்கு செல்லும் பாட்டு கச்சேரி கும்பல் பஸ்ஸில் பயணம் செய்வது போன்ற ஒரு காட்சியை உருவாக்கினார்.

அப்போது இந்தப் பாடலில் மாயவரம், சிதம்பரம், மாயனூர், என தஞ்சை மாவட்டத்து ஊர்களைப் பற்றி பாடுவதாக அமைந்திருந்து. எதிர்பார்த்தது போலவே இந்தப் பாடல் ஹிட் ஆனது“ என்று ஜிங்கி..ஜிங்கி.. ஜிமிக்கி போட்டு பாடல் உருவான விதத்தைக் கூறினார் யுகபாரதி. இந்தப் பாடலை சோலார் சாய், கல்பனா ஆகியோர் பாடியிருந்தனர்.