ராஜமவுலி இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் உருவான பாகுபலி திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்று வசூல் சாதனை செய்தது. அதன்பின்னர் பாகுபலி படத்தின் 2 ஆம் பாகத்தை அதைவிட பிரமாண்டமாக வேறு லெவலுக்கு இயக்கினார் ராஜமவுலி. பாகுபலி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் தாறு மாறு பண்ணிவிட்டது.
இந்தப் படத்தை அடிச்சிக்க வேற எந்தப் படமும் இல்லை என்பதுபோல் வசூலினையும் குவித்தது. தற்போது ராஜமவுலி ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் எனப் பல முன்னணி நடிகர்களைக் கொண்டு ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்தநிலையில் ரசிகர்கள் இவரிடம் ராமாயணத்தை படமாக்க வேண்டும் என்று ராஜ மவுலியிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து எதுவும் பேசாமல் இருந்துவந்த ராஜமவுலி மவுனம் கலைத்து பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து ராஜமவுலி கூறியதாவது, “ரசிகர்கள் பலரும் ராமாயணம் கதையை படமாக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர், நான் ஏற்கனவே அதற்கான திட்டத்தினைக் கொண்டுள்ளேன். ஆனால் ராமாயணத்தை படமாக்குவதைவிட மகாபாரதத்தை படமாக்க வேண்டும் என்ற ஆசை கொண்டுள்ளேன்.
ஆனால் இப்போதைக்கு அதைச் செய்ய இயலாது, இப்போது ஆர்.ஆர்.ஆர் படத்திற்காக சீன்களை மெருகேற்றுதல் பணியில் இருக்கிறேன். மகாபாரதம் எனது கனவு படம். நிச்சயம் நானும் உங்களைப் போலவே அதை வெள்ளித் திரையில் திரையிட வேண்டும் என்ற ஆசை கொண்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.