பிக் பாஸ் வீட்டில் தற்போது 85 நாட்கள் கழித்து ஆடி வரும் போட்டியாளர்கள் மிக முக்கியமான ஒரு கட்டத்தை எட்டி உள்ளார்கள் என்றே சொல்லலாம். சமீபத்தில் வார இறுதியில் அன்ஸிதா மற்றும் ஜெஃப்ரி ஆகிய இருவரும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்த நிலையில் இந்த வாரம் Ticket To Finale டாஸ்க் (TTF) ஆரம்பமாகியுள்ளது.
இந்த வாரத்தில் நடைபெறும் பத்து டாஸ்க்குகளின் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் நபருக்கு நேரடியாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிக முக்கியமான ஒரு வாரமாக பார்க்கப்படும் இந்த டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் நிச்சயம் தொடர்ந்து வெற்றிகளை பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டுமென ஒவ்வொருவரும் தீயாக விளையாடுகின்றனர்.
தீப்பிடிக்கும் பிக் பாஸ்
அதிலும் தங்கள் உடல் அளவிலும் வேகமாக ஈடுபட வேண்டும் என்பதால் பல விதமான மோதல்களும் இதற்கு நடுவே அரங்கேறி வருகிறது. அப்படி ஒரு சூழலில் அனைத்து போட்டியாளர்களும் இருக்க அவர்களிடம் முத்துக்குமரன் மன்னிப்பு கேட்டதும் அதற்கான பின்னணி என்ன என்பதையும் தற்போது பார்க்கலாம்.
கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டே பேசும் முத்துக்குமரன், “நான் இந்த வீட்டில் இருக்கும் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். இதை ஒரு போட்டி என்று பார்த்து யாராவது தவறு செய்வது என் கண்ணிற்கு தெரியும் போதெல்லாம் அவர்களிடம் நிதானமாக அதை பற்றி பேசாமல் முகத்திற்கு நேராக கடுமையாக சொல்லி உள்ளேன்.
மன்னிப்பு கேட்ட முத்துக்குமரன்
85 நாட்கள் இப்படி பலருடன் ஒன்றாக இருக்கும் போது இந்த அளவுக்கு கடுமையாக சொல்லி இருக்கக் கூடாதோ என்று சில நேரங்களில் தோன்றியுள்ளது. அதனால் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதிலும் ஸ்பெஷலாக நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் ராணவிடம் சொல்ல வேண்டும்.
எனக்கு ராணவிடம் தனிப்பட்ட முறையில் இருக்கும் பந்தமும் அதே நேரத்தில் விளையாட்டு என வரும் போது இருக்கும் உறவும் வெவ்வேறாக இருப்பதால் அவரிடம் மன்னிப்பு கேட்கிறேன். ராணவை நான் நிறைய இடங்களில் வேதனைப்படுத்தி இருக்கிறேன். மன்னிப்பை தாண்டி நான் அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்ள வேண்டும். அதிலும் ஸ்பெஷலாக இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமான போது எதிரணியில் இருந்தாலும் என்னை பாராட்டிய ஜாக்குலினுக்கு மிக்க நன்றி” என முத்துக்குமரன் சற்று உருக்கமாக சில கருத்துக்களை போட்டியாளர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டார்.