கோலிவுட்டில் குட்டி புலி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் முத்தையா. அதை தொடர்ந்து கார்த்தியின் விருமன், கொம்பன், விஷாலின் மருது, ஆர்யாவின் காதர் பாட்சா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவரது அடுத்த படத்திற்கான எதிர்ப்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் முத்தையா தன் மகனையே ஹீரோவாக அறிமுகப்படுத்த உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹீரோவான முத்தையா மகன்:
பெரும்பாலும் கிராமத்து கதைகளத்திலேயே கவனம் செலுத்தி படங்களை இயக்கி வருகிறார் முத்தையா. மேலும் இவர் முன்னணி நடிகர்களான கார்த்தி, ஆர்யா, விஷால் போன்றவர்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார். அறிமுகமான குட்டி புலி என்கிற முதல் படத்திலேயே பிரபலமான இயக்குநரானார். அப்படத்தில் சசிகுமார், லட்சுமி மேனன், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இவர் இயக்கத்தில் வெளியான கொம்பன், விருமன், மருது உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது.
நடிகர் கார்த்தியின் பருத்திவீரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக்கு கிராமத்து கதைகள் பொருத்தமாக உள்ளதால் அவர் பெரும்பாலும் கிராமத்து கதைகளிலேயே கவனம் செலுத்தி நடித்து வருகிறார். விருமன், கொம்பன், கடைக்குட்டி சிங்கம், போன்ற கிராமத்து கதையுடைய படங்களில் நடித்துள்ளார்.
மதுரையில் ஷூட்டிங்:
முத்தையாவின் வெற்றிப் படங்களை தொடர்ந்து தன் மகன் விஜய் முத்தையாவை ஹீரோவாக அறிமுகப்படுத்தி ஒரு புது படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திற்கான பூஜையும் சென்னையில் போடப்பட்டு மதுரையில் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். முத்தையா பள்ளி பருவத்தில் ஏற்படும் காதலை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் முத்தையாவுக்கு ஜோடியாக தர்ஷினி, பிரிகிடா சாகா உள்ளிட்டோர் இணைந்து நடிக்க உள்ளனர்.மேலும் கேகேஆர் சினிமாஸ் சார்பில் ரமேஷ் பாண்டியன் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளார். ஜென் மார்ட்டின் இசையமைக்க உள்ளார்.
இப்படம் குறித்து முத்தையா பேசுகையில், காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தை அடுத்து முன்னனி ஹீரோ ஒருவரை வைத்து படத்தை இயக்கவிருந்ததாகவும் அவர் கையில் பலத்த காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த சமயத்தில் படம் ஒன்றை இயக்கி விடலாம் என நினைத்து தன் மகன் விஜய் முத்தையாவை வைத்து இயக்குகிறேன் எனக் கூறியுள்ளார். மேலும் மதுரை அருகில் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் விரைவில் படத்தை முடித்துவிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முத்தையா பள்ளி பருவத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்கவிருந்தாலும் சண்டைகாட்சிகளுக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு பூஜை போட்டபோது எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.